நவராத்திரி ஆறாவது நாளில் வழிபடவேண்டிய அம்பாள் எது தெரியுமா...?

சனி, 1 அக்டோபர் 2022 (10:02 IST)
சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்) பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும். திதி : சஷ்டி.

கோலம்: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும். பூக்கள்: பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம் பருத்தி, சம்பங்கி, கொங்கம். நைவேத்தியம் : தேங்காய் சாதம், தேங்கா ய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
 
ராகம்: நீலாம்பரி ராகத்தில் பாடலாம். பலன்: வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.
 
இன்று நாம் குமாரியாக வழிபடும் காளிகா தேவிதான் பைரவரின் தோற்றத்துக்கு காரணம் பற்றி பார்ப்போம். தாருகாசுரன் என்பவன் சிவபெருமானைக் குறித்து தவம் இருந்தான். அவனுடைய தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவன் முன் தோன்றி, விரும்பும் வரம் கேட்கும்படிக் கூறினார். தாருகனும் தனக்கு மரணமே வரக்கூடாது என்று வரம் கேட்டான்.
 
ஆனால், பிறந்த எவருமே இறக்கத்தான் வேண்டும் என்று சிவபெருமான் கூறி, வேறு வரம் கேட்கும்படிக் கூறினார். சற்று யோசித்துப் பார்த்த தாருகாசுரன், ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக்கூடாது என்று வரம் கேட்டுப் பெற்றான். வரம் பெற்ற தாருகாசுரன், தேவர்களையும், முனிவர்களையும் பலவாறாகத் துன்புறுத்தினான். முனிவர்களின் யாகங்கள் தடைப்பட்டதால் இயற்கையே பாதிப்பு அடைந்தது. மழை பொய்த்தது. எங்கும் வறட்சியே நிறைந்திருந்தது. வறட்சி காரணமாக பசி, பட்டினியால் மக்கள் வாடினர். மூன்று உலகங்களும் ஸ்தம்பித்தன. இதனால் தேவர்களும், முனிவர்களும் பிரம்மாவிடமும், விஷ்ணுவிடமும் சென்று முறையிட்டனர். அவர்கள் இருவரும் தங்களால் இயலாது என்றும், சிவனிடம் சென்று முறையிடலாம் என்றும், ஈஸ்வரனிடம் சென்றனர்.
 
சிவபெருமான், அவன் தன்னிடம் இருந்து வரம் பெற்றுள்ளான் என்றும், தன்னால் அவனை அழிக்க இயலாது என்றும் கூறினார். ஆனால், 'அவனை அழிக்கவில்லை என்றால் பெரும் பிரளயமே ஏற்பட்டு, உலகமே அழிந்துவிடும்' என்று விஷ்ணு கூறினார். அவர் சொல்லியதில் இருந்த உண்மையை உணர்ந்துகொண்ட அன்னை பார்வதி, சிவபெருமானின் கண்டத்தில் இருந்த ஆலகாலத்தை உற்று நோக்கினார். அதில் இருந்து ஒரு சுடர் தோன்றியது. விஷத்தின் கறை படிந்த அந்தச் சுடரை ஒரு பெண்ணாக மாற்றி, காளி என்று பெயரிட்டு, தாருகாசுரனை அழிப்பதற்கு அனுப்பினர்.
 
காளிதேவியும் தன் வாயிலிருந்து அக்னியை வரவழைத்து அதைக் கொண்டு தாருகாசுரனை வதைத்தாள். பின் தன் வாயில் இருந்து தோன்றி, தாருகனை வதைத்த அந்தக் கனலை ஒரு குழந்தையாக  மாற்றினாள். பின்னர் சிவபெருமான் காளியையும், அவள் உருவாக்கிய அந்தக் குழந்தையையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார். சிவன் காளி உருவாக்கிய அந்த குழந்தையைப் போல் எட்டு குழந்தைகளை உருவாக்கினார். அந்த எட்டு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக ஒன்றிணைத்து அந்தக் குழந்தைக்கு 'பைரவர்' என்று திருப்பெயர் சூட்டினார். நவராத்திரி நாயகியரில் 6-வது நாளில் நாம் வழிபடும் குமாரியான காளிகா தேவிதான் பைரவரின் தோற்றத்துக்கும் காரணம் என்பதில் இருந்தே இந்த தேவியின் மகிமையை நாம் உணரலாம்.
 
Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்