கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிதிருவரங்கம் திருக்கோயில், குழந்தைப்பேறு அருளும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கி தலை வைத்து, கிழக்கு முகமாய் புன்னகை பூத்தபடி, வலது கையால் தலைக்கு முட்டுக் கொடுத்து, இடது கையால் தன் தொப்புள் கமலத்தில் தோன்றிய பிரம்மனுக்கு வேத உபதேசம் செய்கிறார். ஸ்ரீதேவி மடியில் சயனித்திருக்க, பூதேவி அவரது திருவடியை தன் மடியில் வைத்துள்ளார்.
பத்தினியின் சாபம் பெற்ற சந்திரன், இந்த ரங்கநாதரை வணங்கி சாபவிமோசனம் பெற்றார். அதேபோல், சுருதகீர்த்தி என்ற மன்னன், இங்கு வழிபட்டு குழந்தைப்பேறு பெற்றான். இதனால், இந்தத் தலம் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்களுக்கு வரங்களை அருளும் தலமாகப் புகழ்பெற்றது.
இந்த திருக்கோயில் ராஜகோபுரம் இல்லாமல், எளிய நுழைவாயிலுடன் காட்சி அளிக்கிறது. ஆனாலும், அதன் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைந்துள்ளன.