இளம்வயது பெண்களுக்கான உணவுப்பழக்கங்கள்

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. 


 
 
உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும். சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும், அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு குண்டாக இருப்போரையும் அழகானவர்கள் என்று சொல்லி விட முடியாது.
 
இவர்கள் பின்பற்றும் மேலும் சில பழக்கவழக்கங்களும் அவர்களது உடல் சக்தியை குறைத்து விடுகின்றன. சாப்பாட்டை குறிப்பாக, காலை உணவை தவிர்ப்பது, நொறுக்குத் தீனிகள், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிடத் தயார் நிலையில் விற்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் அதை வேகமாக சாப்பிடுவது, குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத, வழக்கத்துக்கு மாறான கலப்பில் உணவு சாப்பிடுவது, உணவு வகைகள் மீது விருப்பு-வெறுப்பு காட்டுதல், பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை அதிக அளவில் குடிப்பது போன்ற உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படும் உணவுகளை எடுத்து கொள்ளுதல் ஆகும்.
 
அதனால், வளர் இளம்பெண்கள் சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது சத்துணவு நிபுணர்களின் கருத்து. அதற்கு என்ன செய்யலாம்?
 
* அந்த வளர் இளம் பருவ வயதில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்கு தேவையான சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றி உட்கொள்ள வேண்டும்.
 
* பூப்பெய்தும் காலத்தை கணிப்பது மற்றும் கருத்தடை மருந்து பயன்படுத்துவது பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
* இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். அதை வராமலும் தடுக்க வேண்டும்.
 
* உடல் எடை கூடுகிறதா? அல்லது குறைகிறதா? என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
 
* தினமும் சராசரியாக 2 ஆயிரம் முதல் 2,500 கிலோ கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
 
* சத்து குறைவான உணவு அல்லது வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடும் விவரங்களை கண்டறிவதும், சாப்பிடுவதில் உள்ள குறைகளை மனோரீதியாக கண்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை பரிந்துரைப்பதும் அவசியமான ஒன்றுதான்.
 
மேலும், உடலுக்கு தேவையான சத்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நம்பகமான வழிமுறைகளை உருவாக்கி, அதை பின்பற்ற வேண்டும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்