சிகரெட் பிடிப்பதால் ஞாபகமறதி அதிகரிக்கும்

புதன், 15 ஜூன் 2016 (21:02 IST)
சிகரெட் பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் 3-ல் ஒரு பங்கு ஞாபக மறதி ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. மது குடிப்பவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னர் ஆய்வுகள் தெரிவித்தன. 


 

 
தற்போது சிகரெட் பிடித்தாலும் ஞாபக மறதி ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனை குறித்து டாக்டர் டாம் ஹெபர்னன் தலைமையில் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஆய்வு நடத்தியது.
 
அதற்காக சிகரெட் பிடிப்பவர்கள், அதை நிறுத்தியவர்கள் மற்றும் சிகரெட்டே பிடிக்காதவர்கள் என 3 பிரிவாக பிரித்து அவர்களின் நினைவாற்றலை சோதிக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டனர்.
 
அதில் சிகரெட் பிடிக்காதவர்களைவிட, பிடிப்பவர்களுக்கு தினசரி நடவடிக்கைகளில் 3ல் ஒரு பங்கு ஞாபக மறதி ஏற்படுவது தெரியவந்தது. அதாவது, நினைவாற்றல் சோதனையில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு 59 சதவீத ஞாபக சக்தியும், சிகரெட் பிடிப்பதை கைவிட்டவர்களுக்கு 74 சதவீதமும், சிகரெட்டே பிடிக்காதவர்களுக்கு 81 சதவீத ஞாபக சக்தி இருப்பது தெளிவானது.
 
சிகரெட் பிடிப்பதால் ஞாபக மறதி ஏற்படுவது குறித்து மேற்கொண்ட ஆய்வு, புகை பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம்.
 
ஆனால், நாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் நினைவாற்றல் பாதிக்காமல் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்