ஆரோக்கியமான உணவு முறை உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளவும் சிறந்த முறை ஆகும். சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளலாம்.
கால்சியம் மற்றும் விட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி செய்தல், புகைப்பது போன்று தீங்கான காரியங்களை செய்யாமல் இருத்தல் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
கீரை, பரட்டைக்கீரை, சீமை பரட்டைக்கீரை உள்ளிட்டவைகளில் குறைந்த கலோரிக்கள் உள்ளன. மேலும் இவற்றில் அதிகளவு விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்து இருக்கின்றன. இவை எலும்புகளை உறுதியாக்கும் தன்மை கொண்டுள்ளன.
சிட்ரஸ் அதிகம் நிறைந்த திராட்சை பழத்தில் ஏராளமான விட்டமின் சி உள்ளது. இது எலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. விட்டமின் சி நிறைந்த பழம் மற்றும் காய்கறி வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
சால்மன் ரக மீன்களில் ஒமேகா 3 ரக பேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். மேலும் இதில் விட்டமின் டி நிறைந்துள்ளது. சால்மனை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடல் எடை குறைதலை தவிர்ப்பது மற்றும் தைராய்டு பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
முட்டையில் அதிகளவு புரோட்டீன் மட்டுமின்றி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணமும் அதிகளவில் நிறைந்துள்ளது. இவற்றில் அதிகளவு விட்டமின் டி உள்ளது. இவை உறுதியான எலும்புகளுக்கு வழி வகுக்கும். முட்டையை உணவில் சேர்த்து கொள்வதால், குறைந்த செலவில் விட்டமின் டி பெற முடியும்.
பால் குடிப்பதால் எலும்பு வலுப்பெறும் என அனைவரும் அறிந்ததே. இதில் கால்சியம், விட்டமின் டி, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. தினசரி உணவில் பாலை சேர்த்து கொள்வதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.