பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் சீரகம்...!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (00:33 IST)
சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு  சாப்பிட, வயிறு உப்பசம் தீரும்.
 
* 'எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்' என்கிறது சித்த மருத்துவம். அதாவது, விடாமல்  இருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியையும் 10 சீரகத்தையும் பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால் போதும், விக்கல் நின்றுவிடும்.
 
* உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது (சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத்  தண்ணீர் அருந்தலாம்.
 
* சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டுவர, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.
 
* சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில் மூன்று நாட்களுக்கு  ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச்  சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும், பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்து.  வீட்டில் செய்ய முடியாதவர்கள், சித்த மருந்துக் கடைகளில் ‘சீரகச் சூரணம்’ என்று கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம்.
 
* இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் வரை உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக நாட்டுச் சர்க்கரையைக் கலக்கவும். இந்தக் கலவையை அரை  டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் தலைவலி படிப்படியாகக் குறையும்.
 
* சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து, சித்த மருத்துவர்கள் செய்யும் ‘சீரக வில்வாதி லேகியம்’, பித்த நோய்கள்  பலவற்றையும் போக்கும் மிக முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்ப்படுத்தும் மருந்து. எனவே, உளவியல் நோய்க்கும்கூட இதை ஒரு  துணை மருந்தாகப் பயன்படுத்த முடியும்.
* சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்