இஸ்ரேலில் அதிசயம்: இறந்த குழந்தை உயிர்பிழைத்தது

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:55 IST)
இஸ்ரேல் நாட்டில் இறந்து விட்டதாகக் கூறி சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்று 5 ம்ணி நேரத்திற்கு பின் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்தது.

இஸ்ரேலைச் சேர்ந்தவர் ஃபைஸா மெக்டோப். இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வடக்கு இஸ்ரேலில் உள்ள வெஸ்டர்ன் கலிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அபார்ஷன் செய்யப்பட்டது.

கருவில் உள்ள சிசுவுக்கு 5 மாதங்களே ஆகியிருந்ததால் 600 கிராம் எடை கொண்ட பெண்குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. என்றாலும் அந்தக் குழந்தை இறந்து விட்டதாக ம்ருத்துவர்கள் அறிவித்து, சடலங்களை வைக்கும் அறைக்கு (சவக்கிடங்கு) கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 5 மணி நேரம் குளிரூட்டப்பட்ட சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையை உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்ற போது, குழந்தையின் உடலில் அசைவு இருப்பதைப் பார்த்தனர்.

இதையடுத்து உறவினர்கள் மருத்துவர்களின் உதவியை நாடியபோது, அந்தக் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உதவி இயக்குனர் மோஷ் டேனியல் கூறுகையில், ``இந்த சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. மருத்துவ உலகிற்கே விந்தையாக அமைந்துள்ளது. என்றாலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்