அமைந்தகரையில் வசிக்கும் நபர், அமெரிக்காவில் இருக்கும் நபருடன் மிகச் சுலபமாக நட்புகொள்ள வழிவகைச் செய்யும் அரும்பணியை புரிந்துவருகின்றன, பழகுதளங்கள்!
“செல்பேசி இல்லாமல்கூட வாழ்ந்துவிட முடியும். ஆனால், 'ஆர்குட்' இல்லாமல் உயிர்வாழ இயலாது” என்பது இன்றைய இளையத் தலைமுறையினரின் நிலை.
அண்மைக்காலமாக, 'சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வலைத்தளங்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நெட்டில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இணையதளங்களில் தேடல் கொள்ளும் நண்பர்களுக்கு, ஆர்குட் போன்ற பழகுதளங்கள் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஆயினும், சுருக்கமான அறிமுகத்தைத் தருவது இங்கே நமது கடமை.
பழகுதளங்கள் (Social networking Sites)
இணையதளங்களில் நமக்கென மின்னஞ்சல் முகவரியை உருவாக்குவது போன்றே பழகுதளங்களில் உறுப்பினராவதற்கு உரிய சுலபமான முறைகளைப் பின்பற்றி இணைய வேண்டும். நம் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில், நம்மைப் பற்றிய பொது விபரம், குணாதிசயம், ரசனை, திறன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
அதன்பின், தளம் முழுவதும் வலம் வந்து நம்மையொத்த ரசனையுள்ள நபர்களுடன் நட்புகொள்ளலாம், அரட்டையடிக்கலாம், ஆதி முதல் அந்தம் வரையிலான விஷயங்களை விவாதிக்கலாம், நண்பர்களின் புகைப்படங்களை ரசிக்கலாம், உணர்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்...
இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே பழகுதளங்களின் மகத்துவத்தை நெட்டிசன்கள் உணர்ந்தபோதிலும் மை ஸ்பேஸ், ஆர்குட் போன்ற வலைத்தளங்கள் வந்தபிறகுதான் மவுசு கூடத் தொடங்கியது. தற்போது, ஆர்குட்டில் சுமார் 5 கோடி நண்பர்கள் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
ஆனால், இத்தகைய பழகுதளங்கள் என்னதான் நட்புக்கு பாலமாக இருந்தாலும், அதில் சில (பல!) ஓட்டைகளும் உள்ளன. அந்த பொத்தல்களில் விழுந்தால், எழ முடியாத அளவிலான அபாயங்களை சந்திக்க நேரிடும் என்பதை மறுக்க முடியாது.
பழகுதளங்களில் நட்பை வளர்ப்பதற்கு எந்தெந்த வகையில் உறுதுணைபுரிகின்றன; நட்புக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது போன்ற சாதகங்களையும், இத்தகைய வலைத்தளங்களால் உண்டாகும் பாதகங்கள் குறித்தும், பழகுதளங்களில் பழக்கப்பட சிலரிடம் கேட்டபோது மகிழ்ச்சிக்குரிய விஷயங்களோடு, அதிர்ச்சிக்குரிய தகவல்களும் கிடைத்தன. அதன விபரம் வருமாறு :
மகாலிங்கம் (பத்திரிகையாளர்)
ஆர்குட் போன்ற வலைத்தளங்களால், நம்முடைய நட்பு வட்டாரம் சர்வதேச அளவில் விரிவது ப்ளஸ். ஆஸ்திரேலியாவில் உள்ள நண்பர்களுடன் ஹனீஃப் பற்றிய கருத்தை நேரடியாக கேட்டறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததென்றால், அதற்கு பழகுதளமே காரணம்.
ஆனால், எந்த அளவுக்கு ப்ளஸ் இருக்கோ, அந்த அளவுக்கு மைன்ஸும் இருக்கு. நமது மொத்த விபரமும் பதிவு செய்தால், அதை தவறாக சிலர் பயன்படுத்தக் கூடும். இதில் உள்ள கம்யூனிட்டிகள் (ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கம்யூனிட்டி ஆரம்பித்து, அதில் உறுப்பினராக இருப்பவர்கள், அந்தத் தலைப்பில் விவாதித்துக்கொண்டே இருக்கலாம். கையேந்திபவனில் இருந்து... கர்மயோகம் வரை எத்தனையெத்தனை கம்யூனிட்டிகள்!) மூலம் ஆரோக்கியமான விஷயங்கள் பல விவாதிக்கப்பட்டாலும், ஆபாசத்துக்கும் இடம் உண்டு என்பதால் சிறுவர்களுக்கு ஆபத்து விளைய நேரிடும் என்பது என் கருத்து.
இதுபோன்ற வலைத்தளங்களில் ஆபாசம் புகாமல் பார்த்துக்கொண்டால், நட்புக்கும் நல்லது. நண்பர்களுக்கும் நல்லது.
வித்யா லட்சுமி (தனியார் வானொலி வர்ணனையாளர்)
எனக்கு பழகுதளத்தில் 500 நண்பர்கள் உள்ளனர். ரேடியோவில் எனது வர்ணனை எப்படி உள்ளது என்பதை நேரடியாக அறிந்து, என் பிழையை திருத்திக் கொள்ள முடிகிறது. புதிய உத்திகள் குறித்து விவாதிக்க முடிகிறது. அதேநேரத்தில், நல்ல பொழுதுபோக்காவும் இருக்கிறது.
ஆனால், பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். காரணம், பெண்களுடையை முழு விவரங்களை அறிந்துகொண்டு, அதன் மூலம் புதிய அக்கவுண்டை துவக்கி, தவறாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அப்படி சில நிகழ்வும் நடந்துள்ளது. அதோடு, நம் புகைப்படங்களை சுலமாக டவுண்லோடு செய்துகொண்டு, விஷமத்தனம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
பிரேம் (நிகழ்ச்சி தயாரிப்பாளர் - தனியார் தொலைக்காட்சி)
பழகுதளங்கள் மூலமாக பல்வேறு நாடுகளிலில் இருந்தும் நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரே ரசனை கொண்டவர்களைக் கண்டுகொள்வது சுலபம். கம்யூனிட்டிஸ் மூலமாக நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
அதோடு, நாம் பணிபுரியும் துறை சார்ந்த தகவல்களையும், அது சார்ந்த நபர்களையும் சுலபாக பிடித்து நட்பாக்கிக் கொண்டு, நமது துறையில் மேலும் புதுமைகள் புகுத்த முடியும்.
அத்துடன், தொழில் நிறுவனங்களும் இப்போதெல்லாம் பழகுதளங்கள் மூலமாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக செய்தி வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், சிறுவர்களுக்கு இது உகந்தது கிடையாது. நமது கற்பனைத்திறனை குறைப்பதுக்கும், சோம்பேறித்தனத்தை அதிகமாக்குவதுக்கும் காரணமாகிவிடும் என்று உளவியல் நிபுணர்கள் சொல்வதையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
சுரேஷ் (நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பணிபுரியம் செஃப்)
என்னைப் பொறுத்தமட்டில், இப்போதெல்லாம் நட்பு என்கிற உறவு வளர்ப்பதில் பழகுதளங்களே சிறந்த பாலம். நல்ல பொழுதுபோக்குடன், வெவ்வேறு குண நலன்களைக் கொண்டவரைக் காண முடிகிறது. பிரபலமானவர்களுடனும் நட்பு கொள்ள வாய்ப்பு உள்ளது.
ஆனால், நாம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். சில கம்யூனிட்டிகளும் வக்கிர புத்தி உடையவர்களும் சேர்ந்து, இளைஞர்களை தவறான விஷயங்களுக்கு அழைத்துக் கொண்டுபோக வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இப்போதுள்ள கம்யூட்டர் யுகத்தில் நட்பை வளர்ப்பதில் பழகுதளங்களுக்கே பெரும்பங்கு.
நண்பர்கள் கவனத்திற்கு...
கணினி யுகத்தில் நட்புக்கு பாலமாக திகழ்வதில், பழகுதளங்கள் பெரும்பங்காற்றுகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால், அதில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து விழிப்புடன் கூடுவது அவசியம்.
அவ்வாறு கவனத்துடன் செயல்பட்டால், நண்பர்கள் பலரைப் பெற்று துன்பமின்றி வாழலாம். இல்லையேல், எட்டப்பர்களினால் வீழ வேண்டியதுதான்.
'மெளஸ்' நக நட்பது நட்பன்று அத்துடன் உஷாராய் இருப்பது நன்று.