'நட்பை புதுப்பிக்கலாம் வாங்க!'

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (12:31 IST)
சமீபத்தில் சில நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தேன். அப்போது ஒரு விஷயத்தை பற்றி பேச்செடுத்தேன்.

"ஆகஸ்ட் முதல் ஞாயிறு ஒரு விஷேச தினம். அது என்ன தெரியுமா?" என்றேன்.

ஆர்வமாக என்னை பார்த்தவர்களில், "என்ன, உன் பிறந்த நாளா?" என்றார் ஒருவர்.

"ஏதேனும் பார்ட்டி வைக்க போறீயா?" என்றார் மற்றொரு நண்பர் கண்கள் கிறங்க.

'இல்லை, அன்று நண்பர்கள் தினம்" என்றேன் நான்.

'அப்படியா, அதற்கென்ன இப்போ' என்றனர் ஆர்வம் வடிந்தவர்களாய். அதோடு, ஏதோ வேற்றகிரகவாசியை பார்ப்பவர்கள் போல் என்னை பார்த்தனர்.

ஏண்டா சொன்னோம் என்று நினைக்கும் அளவுக்கு நொந்து, நூலாகிப் போனேன் நான்.

ஆம். இந்தளவுக்குத்தான் நண்பர் தினம் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.

'பிப்ரவரி 14'ல் காதலர் தினத்தை கொண்டாடும் அளவுக்கு, நம்மில் பலர் நண்பர்கள் தினத்தை கொண்டாடுவதே இல்லை. நண்பர்கள் தினம் எப்போது என்பதே பலருக்கு தெரியாது.

அவ்வளவு ஏன், நண்பர்கள் தினம் என்று ஒன்று இருப்பதே பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை என்பதுதான் வேதனை.

காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் என உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எத்தனையோ தினங்கள் இருக்க, இந்த உறவுகளுக்கு இணையாக போற்றப்படும் நண்பர்கள் தினத்தை மட்டும் நாம் ஏன் கண்டுகொள்வதே இல்லை என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

'உடுக்கை இழந்தவன் கை போல...' என்ற திருவள்ளுவர் சொன்ன நட்பெல்லாம், இன்று திருக்குறள் அளவிலேயே நின்று போனதோ என்ற ஆதங்கப்படும் வகையில் தான் உள்ளது.

பொழுது போக்கிற்காக பேசிக்கொள்ளும் இரண்டு பயணிகள் போல 'ரயில் சினேகிதம்' ரீதியில் மாறிப்போனது பெரும்பாலானோர் நட்பு.

இதனால், யார் மனதிலும் நட்பு இல்லை என்பது அர்த்தம் அல்ல. எல்லோரது மனதுக்குள்ளும் நட்பு 'பூ' பூத்து குலுங்கத்தான் செய்கிறது. ஆனால், வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் தான் நம்மில் பெரும்பாலானோருக்கு நேரம் கிடைப்பதில்லை.

சுருங்கச் சொன்னால், நட்பின் சிறப்பு, வேறு எந்த உறவுக்கும் கிடையாது. அதனால்தான், புனித நூலான 'பைபிள்' முதல் உலகப் பொதுமறையான 'திருக்குறள்' வரை அனைத்து நூல்களுமே நட்புக்கு தனி 'அதிகாரம்' கொடுத்து சிறப்பு செய்துள்ளன.

'நட்பைக்கூட கற்பை கற்பைபோல எண்ணுவேன்' என்ற 'தளபதி' பட பாடல் வரிகளும், 'நட்புக்கு பொய்கள் தெரியாது, நட்புக்கு தன்னலம் கிடையாது...,' என்ற 'பாண்டவர் பூமி' பட பாடல் வரிகளும் இதை மையமாக வைத்து எழுதப்பட்டவையே.

'நட்பு', 'நண்பர்கள்', நட்புக்காக'... என்று திரைப்படங்களுக்கு தலைப்பிடுவதும் நட்பின் முக்கியத்துவம் கருதியே.

எந்த உறவு முறை ஏற்படுவதற்கும் ஏதேனும் ஒரு அடிப்படை காரணம் வேண்டும். ஆனால், ஒருவரிடம் நட்பு பாராட்ட என்ன காரணம் தேவை?

'நானும், எனது மனைவியும் இனிமேல் நண்பர்களாய் இருக்க முடிவு செய்துள்ளோம்' என்று தெரிவிக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

'தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன்' என்கின்றனர் பெரியவர்கள்.

ஒருமித்த கருத்து கொண்ட ஆண், பெண் நண்பர்கள் பின்னர் காதலர்களாகி, கணவன்-மனைவியாகவும் ஆவது கண்கூடு. இறுதிக் காலம் வரை அவர்களை இணைத்து வைத்திருப்பது நட்பு செய்யும் மாயமின்றி வேறென்ன?

ஒருவர், முதியோராகிவிட்டால் வீட்டில் அவருக்கு நல்ல நண்பராக இருப்பது பேரன்கள்தான்.

நமது மனம் விசாலமாக இருந்தால் நம் வீட்டு நாய் கூட நமக்கு நல்ல நண்பன்தான்.

காதலுக்கு கண் இல்லை, ஆனால் நட்புக்கு எதுவுமே தேவையில்லை.

ஒருவரையொருவர் பார்க்காமலும், பேசாமலும் வருந்திகொண்டிருக்க இது கோப்பேரும்சோழன்- பிசிராந்தையார் காலம் அல்ல, இது தகவல் தொடர்பு காலம்.

பறவைகள் மூலம் தூது அனுப்பிய காலம் போய், ஓலை, தபால் சேவை, தந்தி, தொலைபேசி, செல்பேசி, இண்டர்நெட், இ-மெயில் என உள்ளங்கையில் சுருங்கிக் கொண்டிருகிறது உலகம்.

எனவே, நட்பை புதுப்பிப்போம், நண்பர்களை பெருக்குவோம்.

'அனைத்து நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள தின வாழ்த்துக்கள்!'

வெப்துனியாவைப் படிக்கவும்