2020 ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் : ஆன்லைன் கடன் விபரீதங்கள்…

புதன், 23 டிசம்பர் 2020 (22:55 IST)
பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதை எப்படியாவதும் பெறுவதற்கும் மக்கள் உழைக்கின்றனர், அதுபோதாமல் கடன் வாங்கிப் பற்றாக்குறையைச் சமாளிக்கின்றனர். ஆனால் இந்தக் கடன் வாங்குதலில்தான் எத்தனை சூட்சுமங்கள் அடங்கியுள்ளது என்பதைக் கண்ணுறும்போதும் அடிமனம் பதறிக் களங்குகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல தமிழ்சினிமா இயக்குநர் ஒருவர் ஒரு கந்துவட்டிக்காரரிடம் வாங்கிய ஒரு பெரிய தொகையைச் செலுத்த முடியாமல்  அவர் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அது சினிமா என்ற மட்டில் அது பொதுவெளியில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டும் அனைத்து ஊடகங்களிலும்  முக்கிய செய்தியாக வெளியானது. சினிமாவுக்குள் இப்படி அநியாய வட்டிக்குக் கடன்கொடுத்து, கொடுத்த கடனை வசூலிக்க மிரட்டல்கள் விடுக்கப்படுவது குறித்து மறைந்தவருக்கு வேண்டிய சில நடிகர்களே பேட்டிகொடுத்தனர்.

இந்நிலையில்,  நேற்று முன் தினம், தமிழகத்தைச் சேர்ந்த விவேக்  என்பவர் ஆன்லைன் மூலம் ரூ. 4000 கடன் வாங்கியதால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கொடுத்த டார்ச்சரால் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுபெரும் பேசு பொருளானது.

ஆன்லைனில் கடன் வாங்கிய விவேக் என்பவர் உரிய கடனுக்கான வட்டி மற்றும் அசலைக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் விவேக்கின் உறவினர்கள் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவரைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பி அவதூறு பரப்பினர் ஆன்லைன் நிறுவன ஊழியர்கள். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பொதுமக்கள் கடன் வாங்கக்கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. முக்கியமாக கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 60 க்கும் மேற்பட்ட ஆன்லைன் கடன்  வழங்கும் நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாதவை என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திட்டமிட்டு வலைவிரித்து,  உரிய கடன் வராத நிலையில் , கடன்காரர்களிடம் வசூலிக்கமுடியாத நிலையில் எந்த எல்லைக்கும்  செல்லும் இந்த ஆன்லைன் நிறுவனங்கள் செயல், கந்து வட்டியை விடவும் மோசமானது. கடன் வாங்கியவர்களைப் பின் தொடர்ந்து அவருக்கே தெரியாமல் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அதை அவருக்கு எதிரான ஆயுதமாக்கிவிடும் குரூரம் இன்றைய நவீன தொழில்நுட்பப் புத்தியில் விளைந்து, சமூகத்தைச் சீரழிக்க  முளைத்துள்ள விஷமாகும்.

இளைஞர்களோ, பெரியவர்களோ, மாணவர்களோ முன்பின் தெரியாமல் இந்த மாதிரி ஆன்லைனின் குறுகிய நேரத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கிறது என்பதற்காகச் சிக்கலில் மாட்டுக்கொள்ளவேண்டாம்…

இது நம் எல்லோருக்கும்  எச்சரிக்கை விடுக்கும் சம்பவமாகவே எடுத்துக்கொள்வோம்.

சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்