சமையல் எரிவாயுவுக்கான நேரடி மானியத் திட்டத்தைத் தொடங்கியது மத்திய அரசு
சனி, 15 நவம்பர் 2014 (13:42 IST)
வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு, தற்போது நேரடியாக மானியம் வழங்கப்பட்டு 11 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் செயல்படுத்தியது.
ஆதார் அட்டை மூலம் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.
இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஆதார் அட்டையை எந்த திட்டத்தின் பலனை பெறுவதற்கும் கட்டாயமாக ஆக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
தற்போது நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் நேரடி மானியம் திட்டம் உள்ளது. பாஜக தலைமையில் பொறுப்பேற்ற மத்திய அரசும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வங்கி கணக்கு மூலம் செலுத்தும் வகையில் புதிய திட்டத்துக்கு அமைச்சரவை கடந்த அக்டோபர் மாதத்தில் ஒப்புதல் அளித்தது.
மாற்றி அமைக்கப்பட்ட நேரடி மானிய திட்டத்தின்படி, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் வங்கி கணக்கு மூலம் மானியத்தை நேரடியாகப் பெறலாம்.
இந்த புதிய முறை தற்போது நேரடியாக மானியம் வழங்கப்பட்டு வரும் 11 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் இன்று முதல் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
எஞ்சிய அனைத்து பகுதிகளையும் சேர்த்து ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த புதிய மானிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
மாற்றி அமைக்கப்பட்ட திட்டப்படி ஆதார் எண் உள்ளவர்கள் வங்கி கணக்கு மூலம் இணைத்து கொள்ளலாம். ஆதார் இல்லாதவர்கள் வங்கி கணக்கை மட்டும் அளித்து மானியம் பெறலாம்.
தற்போது வங்கி கணக்கை இணைத்திருப்பவர்கள் தொடர்ந்து மானியம் பெறுவார்கள். மற்றவர்களுக்கு 3 மாதகாலம் அவகாசம் அளிக்கப்படும்.
அவ்வாறு இணையவில்லை என்றால், மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும். அப்போது சந்தை விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படும். வங்கி கணக்கை இணைத்த பிறகு மானியம் கணக்கில் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.