உள்நாட்டு சேமிப்பு, முதலீட்டின் அளவை அதிகரிப்பது அவசியம்: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்

ஞாயிறு, 22 நவம்பர் 2015 (14:56 IST)
நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் உள்நாட்டு சேமிப்பு, முதலீட்டின் அளவை மேலும் அதிகரிப்பது அவசியம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் கூறியுள்ளார்.


 

 
கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக  ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் வருகைதந்தார்.
 
அப்போது இது குறித்து செய்தியாளர்களிடம் ரங்கராஜன் கூறியதாவது:-
 
இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் நிலையாகவும், வளர்ச்சி நிலையிலும் உள்ளது.
 
இப்போது உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக உள்ளது. ஆயினும் கூடுதல் வளர்ச்சி தேவைப்படுகிறது.
 
இந்த ஆண்டு வேளாண்மைத் துறையில் போதிய அளவு வளர்ச்சி இல்லாத நிலையில், தொழில்துறை சற்றுக் கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது.
 
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நேரடி அன்னிய முதலீடு உதவியாக இருக்கும்.
 
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம். இந்த விஷயத்தில் மேலை நாடுகளின் அனுபவத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
 
அனைத்துத் துறைகளிலும் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் உள்நாட்டு சேமிப்பு, முதலீட்டின் அளவை மேலும் அதிகரிப்பது அவசியம்.
 
அதே நேரம் நேரடி அன்னிய முதலீடும் தேவைப்படுகிறது. வெளிநாட்டவர்கள் முதலீட்டுடன் புதிய தொழில் நுட்பத்தையும் கொண்டு வருகின்றனர்.
 
இதைக் கண்காணிப்பதற்கான அமைப்பை மட்டுமே நாம் கட்டமைக்க வேண்டும். கடந்த 2007 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக இருந்த நேரத்தில் முதலீடு 38 சதவீதமாக இருந்தது. 
 
இப்போது முதலீட்டுச் சதவீதம் குறைந்திருந்தாலும் வளர்ச்சி நிலையாக உள்ளது. உற்பத்தி மூலதனம், முதலீட்டின் அளவு இந்த இரண்டையும் அதிகரிப்பதன் மூலமே பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும். இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்