விமான பயண கட்டணம் உயருகிறது

ஞாயிறு, 3 மார்ச் 2013 (12:40 IST)
FILE
எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை 3.5 சதவீதம் உயர்த்தி உள்ளதால் விமான பயணக் கட்டணங்களை உயர்த்த விமானச் சேவை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 7 சதவீதம் உயர்த்தின. இதையடுத்து, உள்நாட்டு விமான போக்குவரத்தில் எரிபொருளுக்கான கூடுதல் வரி 150 - 250 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. அதுபோன்று, சர்வதேச விமான போக்குவரத்திற்கான கூடுதல் வரி 825 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் அக்டோபரில் விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில் ஜனவரியில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயர்ந்ததால் உள்நாட்டில் விமான எரிபொருள் விலையை உயர்த்தியதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், மார்ச் 1-ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை 3.5 சதவீதம் உயர்த்தின. விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் விமானச் சேவை நிறுவனங்கள், விமான பயணக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. ஆனால், ஏற்கனவே விமான கட்டண உயர்வால், விமான பயணத்திற்கான தேவை குறைந்துள்ள நிலையில், மீண்டும் கட்டணத்தை உயர்த்த, ஒரு சில நிறுவனங்கள் தயங்கி வருகின்றன. இதுகுறித்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "விமான பயணக் கட்டணத்தை உயர்த்த உள்ளோம். ஆனால், எப்போது என்று முடிவு செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, யாத்ரா டாட்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரத் தால் கூறியதாவது: விமான பயணக் கட்டணம் உயரும்போது, பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், முதன்முறையாக விமான பயணத்திற்கான தேவை வளர்ச்சி, பின்னடைவை கண்டு உள்ளது என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்