பெட்ரோல் விலை ரூ.6 உயர்த்தக் கோரிக்கை

வியாழன், 12 மே 2011 (12:40 IST)
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் அளவிற்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்த மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பெட்ரோல் விலை நிர்ணயத்தின் மீதான அரசின் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை பன்னாட்டுச் சந்தையில் உயர்வதற்கேற்றவாறு பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளது என்றாலும், லிட்டருக்கு ரூ.1 அல்லது 2 உயர்த்தும்போது தன்னிச்சையாகவும், அதற்குமேல் உயர்த்துவதாக இருந்தால் அரசின் ஒப்புதல் பெற்று உயர்த்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, தற்பொழுது நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு பெட்ரோல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.6 வரை உயர்த்த அனுமதி கோரி எண்ணெய் நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகள் மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பின்போது விலை உயர்விற்கான ஒப்புதல் பெறப்படும் என்றும், விலை உயர்வு இன்று இரவு முதலே நடைமுறைப்படுத்தப்படும் என்று டெல்லி செய்திகள் கூறுகின்றன.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 நட்டத்தில் விற்று வருவதாகவும், எனவே நடத்தைக் கட்டுப்படுத்த லிட்டருக்கு ரூ.6 விலையேற்றுவது அவசியம் என்று கேட்டுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

இன்று மத்திய அரசிம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க்ப்படும் என்று அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 வரையும், சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.25 வரையும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்