தேவையான உரம் ஒதுக்கீடு

வியாழன், 4 ஜூன் 2009 (13:36 IST)
தர்மபுரி மாவட்டத்தில் ஜுன் மாதத்திற்கு தேவையான உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் முகமது அலி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 8 வட்டாரங்களிலும், விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரம் 3010 டன் ஆகும்.

இதனை பல்வேறு உர நிறுவனங்களின் மூலம் ஜுன் மாதத்திற்கு விநியோகிப்பதற்கு, வேளாண்மைத் துறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

யூரியா 944 டன், கூட்டு உரங்கள் 658 டன், பொட்டாஷ் உரம் 515 டன், டி.ஏ.பி. உரம் 543 டன், அமோனியம் சல்பேட், அம்மோனியம் குளோரைடு 200 டன் என மொத்தம் 2 ஆயிரத்து 860 டன் உரம் ஒதுக் கீடு செய்யப்பட்டு உள்ளது.

டி.ஏ.பி உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இருப்பு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே அரசு நிர்ணயித்த விலைக்கே, உரங்களை வாங்கி பயன்படுத்திட கேட்டு கொள்ளப்படுகிறது. உரம் விலை அதிக விலைக்கு விற்றாலோ அல்லது உரம் சரிவரகிடைக்கவில்லை போன்ற குறைகளை கண்காணிப்பதற்காக வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இதற்கான பொறுப்பு அலுவலர்கள் நிர்ணயித்து, உர விற்பனை கண்காணிக் கப்படுகிறது.

அத்துடன் உரம் தேவை குறித்தோ அல்லது மற்ற விவரங்கள் தேவைப்பட்டாலும் விவசாயிகள், அந்தந்த வட்டாரங்களில் வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்