தனியார் விமானங்கள் வேலை நிறுத்தம்

சனி, 1 ஆகஸ்ட் 2009 (10:56 IST)
தனியார் விமான நிறுவனங்கள், ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று வேலை நிறுத்தம் செய்வது என முடிவெடுத்துள்ளன. அன்று தனியார் விமானங்கள் பறக்காது. இதனால் லட்சக்கணக்கான விமான பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.

மும்பையில் நேற்று தனியார் விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெட் ஏர்வேஸ் சேர்மன் நரேஷ் கோயல், இன்டிகோ ஏர்லைன்ஸ் சேர்மன் ராகுல் பாட்டியா, கிங்பிஷர் சேர்மன் விஜய் மல்லையா, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அனில் பஜ்ஜால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று விமானத்தை இயக்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஜெட் ஏர்வேஸ், ஜெட் லைட், கிங்பிஷர் ஏர்லைன்ஸ், கிங்பிஷர் ரெட், ஸ்பெஸ் ஜெட், இன்டிகோ, கோ ஏர் ஆகிய தனியார் விமானங்கள் இயக்கப்படாது.

இந்த வேலை நிறுத்தத்தில் அரசு துறை நிறுவனமான ஏர்-இந்தியா பங்கேற்காது.

இது குறித்து விஜய் மல்லையா கூறும் போது, தனியார் விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் இயங்காவிட்டால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விமான பயணிகளும், அரசும் உணர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று விமான டிக்கட் எடுத்துள்ள பயணிகளுக்கு, டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும். இந்த வேலை நிறுத்ததில் மற்ற நாடுகளுக்கு இயக்கப்படும் தனியார் விமானங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தனியார் விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, 2008-09 ஆம் நிதி ஆண்டில் தனியார் விமான நிறவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

இதன் பொதுச் செயலாளர் அனில் பஜ்ஜால் கூறும்போது, விமான நிறுவனங்களுக்கு கூடுதலாக வருடத்திற்கு சுமார் 250 மில்லியன் டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

விமானங்களை இயக்குவதன் மொத்த செலவில் விமான பெட்ரோலுக்கு மட்டும் 40 விழுக்காடு செலவாகிறது. மற்ற நாடுகளை விட, இதன் விலை இந்தியாவில் 65 விழுக்காடு அதிகமாக உள்ளது.
அதே போல் விமான நிலையங்கள் விதிக்கும் பல்வேறு கட்டணங்களும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் 80 விழுக்காடு அதிகமாக இருக்கின்றது.

விமான பெட்ரோலுக்கு விதிக்கப்படும் அதிக வரி, விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரி போன்றவைகளால் தனியார் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை, அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், விமானத்தை இயக்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளன. இதனால் சுமார் 1,200 தனியார் விமானங்கள் வானில் பறக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்