ஜாகுவார் தயாரிப்பில் இறங்கியது டாடா நிறுவனம்

செவ்வாய், 22 ஜனவரி 2013 (16:44 IST)
FILE
புனேவில் உள்ள தனது தொழிற்சாலையில் ஜாகுவார் கார்களை தயாரிக்கும் பணியை டாடா நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனால் இறக்குமதி வரி மற்றும் காரின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் ஜாகுவார் எக்ஸ்எப் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து டாடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிகமான வரி விதிக்கப்படுவதால் இதன் விலை இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இறக்குமதியை குறைக்கவும், காரின் விலையை குறைக்கவும் ஜாகுவார் கார் பாகங்களை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து இந்தியாவில் அதை ஒருங்கிணைத்து விற்பனை செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்தது.

அதனடிப்படையில் புனே அருகே உள்ள சகன் தொழிற்சாலையில் இதற்கான பணியை டாடா நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஜாகுவார் காரை ரூ.44.50 லட்சத்துக்கே விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2010-ஆம் ஆண்டில் ஜாகுவார் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை ரூ.48.37 லட்சமாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியான வரி அதிகரிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஜாகுவார் எக்ஸ்எப்-இன் விலை கணிசமாக உயர்ந்தது. இதை சரிசெய்து சொகுசு கார் வர்த்தகப் போட்டியில் களமிறங்கும் முனைப்புடன் டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்