சேவை வரி செலுத்தாதவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் - ப.சிதம்பரம் பேச்சு

திங்கள், 11 நவம்பர் 2013 (17:26 IST)
சென்னை மண்டல மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை சார்பில், சேவை வரியை தானே முன்வந்து செலுத்தும் வசதியை ஊக்குவிக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்து பேசியதாவது:-
FILE

கல்வியை தவிர சேவையை சந்தைபடுத்தக்கூடிய எதற்கும் சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் சேவை வரி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் 17 லட்சம் பேர் தானே முன்வந்து சேவை வரி செலுத்த தங்களை பதிவு செய்தனர். இதில் 7 லட்சம் பேர் மட்டுமே சேவை வரியை முழுமையாக செலுத்தினர்.

மற்ற 10 லட்சம் பேர் சேவை வரி செலுத்தவில்லை. அவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைத்து வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து கொள்ளப் பார்க்கின்றனர். வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மற்ற நாடுகளைவிட மென்மையான அணுகுமுறையை இந்தியாவில்தான் இருக்கிறது.

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சேவை வரியை முழுமையாக வசூலிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக யாரையும் கண்டிப்பதும் அபராதம் விதிப்பதும் மத்திய அரசின் நோக்கம் அல்ல. அவர்களை தானாக முன்வந்து நேர்மையான முறையில் சேவை வரி செலுத்த செய்வதே எங்கள் நோக்கம். உலகிலேயே இந்தியாவில் தான் குறைந்த அளவிலான வரி விதிப்புகள் உள்ளன.

இந்திய மக்கள் தொகையுடன் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை கணக்கிடும் போது 12 சதவீதம் வரி வசூலிக்க திட்டமிடப்பட்டது. கடந்த 2008-ல் மட்டுமே 11.9 சதவீதம் அளவில் வரி வசூலிக்கப்பட்டது. மற்ற ஆண்டுகள் மிக குறைவான அளவே வரி வசூலிக்கப்பட்டது. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்