சத்யத்தை வாங்க ஹிந்துஜா முயற்சி

திங்கள், 2 பிப்ரவரி 2009 (15:42 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்க விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

பிரபல தொழில்-வர்த்தக நிறுவனமான ஹிந்துஜா குழுமமும், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஜா குளோபல் சொலியூஷன் [Hinduja Global Solutions-HGSL] நிறுவனத்தின் சார்பில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ஹிந்துஜா குளோபல் சொலியூஷன் உயர் அதிகாரி கூறுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இன்வெஸ்ட் மென்ட் பாங்கரான கோல்டுமென் சாஸ் [Goldman Sachs] நிறுவனத்திற்கு, எங்களின் விருப்பம் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்ய விலை புள்ளி கோரும் போது, அதில் நாங்களும் பங்கேற்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளோம்.

ஹிந்துஜா குளோபல் சொலியூஷன் வங்கி கணக்கில் 100 மில்லியன் டாலர் உள்ளது. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்க தேவைப்பட்டால் ஹிந்துஜா சகோதரர்கள் பணத்தை கொடுக்க தாயராக உள்ளனர் என்று தெரிவித்தார்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தற்போது மத்திய அரசு நியமித்துள்ள ஆறு பேர் இயக்குநர்களாக உள்ளனர்.

இதன் இயக்குநர் குழு கூட்டம் வருகின்ற 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய நிலை குறித்து ஆராயப்படும் என்று தெரிகிறது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்க ஏற்கனவே எல் அண்ட் டி, ஸ்பைஸ் குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. தற்போது இந்த போட்டியில் ஹிந்துஜா குழுமமும் இணைகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்