இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1 டிரில்லியன் டாலர்: மாண்டெக் சிங் அலுவாலியா

வெள்ளி, 28 ஜனவரி 2011 (17:41 IST)
2012ஆம் ஆண்டு தொடங்கும் இந்தியாவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1 டிரில்லியன் டாலர்கள் (1 டிரில்லியன் = 1000 பில்லியன், 1 பில்லியன் = 100 கோடி = ரூ.45 இலட்சம் கோடி) தேவைப்படுகிறது என்றும், அதில் பாதி நிதியை அயல் நாட்டு, உள்நாட்டு தனியார் மூலதனத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்திலுள்ள சுற்றுலாத் தலமான டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாண்டெக் சி்ங் அலுவாலியா, தனியார் முதலீடு என்று இந்திய அரசு கூறுவதில் அந்நிய மூலதனத்தை உள்ளடக்கியே என்று கூறியுள்ளார்.

“ஒன்றிணைந்த வளர்ச்சி என்று நாங்கள் கூறுவதன் பொருள், அயல் நாட்டு மூலதனத்தையும் சேர்த்த உள்நாட்டு முதலீட்டையே, அதுவே எங்கள் கொள்கையின் உட்பொருள” என்று கூறியுள்ள அலுவாலியா, “ இன்றைக்கு இந்தியா கண்டுவரும் உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது, தனியார் பங்கேற்பால்தான் சாத்தியமானது, அதில் அரசின் பங்கும் அடங்கியுள்ளது. அதனால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இதையே அனைவரின் நலனையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற சமூக கொள்கையாக கூறுகிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் நியூ யார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜோசஃப் ஸ்டிக்லிட்ஸ், பெரும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்