ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நிதியுதவி

சனி, 4 ஜூலை 2009 (14:55 IST)
மக்களவையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த 2008-09 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டில் அனைத்து நிலைகளிலும் பொது சுகாதார பிரசவ முறை வலுப்படுத்த தேசிய ஊரக சுகாதார இயக்கம் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக 2008 ஆம் ஆண்டு டிசம்பர் வரை 6.49 லட்சம் ஆஷா என்றழைக்கப்படும் சுகாதாரத் தொண்டர்களும் மற்றும் துணை நிலை தொண்டர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5.63 லட்சம் பேர்களுக்கு அறிமுக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 4.12 லட்சம் ஆஷாக்களுக்கு மருந்து பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார சேவைகள் 24 மணிநேரமும், எல்லா நாட்களிலும் மக்களுக்கு கிடைக்கச் செய்வதே தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் குறிக்கோளாகும்.

நாட்டில் உள்ள 22,370 ஆரம்ப சுகாதார மையங்களில் 2005 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவர கணக்கின்படி 1263 மையங்கள் மட்டுமே எல்லா நாட்களிளும், 24 மணி நேரமும் செயல்பட்டன (அதாவது தேசிய ஊரக சுகாதார இயக்கம் செயல்படுவதற்கு முன்பாக).

தற்போது, மாநிலங்களின் கணக்கின்படி, 7612 பொது சுகாதார மையங்கள், 24 மணிநேரமும், எல்லா நாட்களிலும் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் ஜனனி சுரக்சா திட்டத்தின் கீழ் 15,992 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை 8645 துணை நிலை மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநிலங்களில் இதுவரை 9073 மருத்துவர்களும் 1875 சிறப்பு மருத்துவர்களும் 20,979 செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மருத்துவமனைகளில் மனிதவள இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இந்திய பொது சுகாதார தரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் அடிப்படை சேவைகளை மேம்படுத்தும் விதமாக மாவட்ட மருத்துவமனைகளுக்கு முதல் தவணையாக ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலங்களில் 243 நடமாடும் மருத்துவ பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.

பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2008-09 ஆம் ஆண்டில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் மிகப் பெரிய அளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நோய் தொற்றுவதற்கு அதிகளவு சந்தர்ப்பங்கள் கொண்ட 1271 குழுக்களுடன் நேரடி ஆய்வு, 101 லட்சம் பேர்களுக்கு ஆலோசனை மற்றும் எச்ஐவி பரிசோதனை, (இதில் 41.51 லட்சம் பேர் கர்ப்பணி பெண்கள்), 2.17 லட்சம் நோயாளிகளுக்கு ஏ ஆர் வி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்