ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் கட்டாயம் - மத்திய நேரடி வரி வாரியம்

புதன், 24 ஜூலை 2013 (14:00 IST)
FILE
நடப்பாண்டு முதல் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலும், அவர்களும் கட்டாயம் வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவான சம்பளம் மற்றும் இதர வருவாயாக 10,000 வரை பெறுவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று கடந்த 2011 - 12, 2012 - 13 மதிப்பீடு ஆண்டுகளில் விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது 2013 - 14 ஆம் மதிப்பீடு ஆண்டு முதல் அவர்களும் கட்டாயம் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்ட அறிக்கை:

வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அவற்றை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக ரூ.5 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுவோருக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதில் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு முதல் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் கட்டாயமாக ஆன்லைன் (இ-பைலிங்) மூலம் மட்டுமே ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ரூ.5 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களும் இனிமேல் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் வழக்கமான படிவத்திலோ அல்லது இ-பைலிங் மூலமாகவோ தாக்கல் செய்யலாம். இவ்வாறு நேரடி வரி வாரியம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்