அந்நிய செலாவணி திடீர் வெளியேற்றம் நல்லதல்ல: சுப்பா ராவ்

செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (17:34 IST)
FILE
கடன் வாங்கல், அந்நிய முதலீடுகள் போன்றவற்றின் பங்கே அதிகமாக இருக்கும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு, திடீரேன்று பெருமளவிற்கு வெளியேறினால் அது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பலவீனமாகிவிடும் என்று இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் டி.சுப்பா ராவ் கூறியுள்ளார்.

உலக நாடுகளின் மைய (அரசு) வங்கிகளின் ஆளுநர்கள் பங்கேற்ற சிறப்பு மாநாடு ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய சுப்பா ராவ், இந்திய பணத்தை அந்நிய நாணயத்திற்கு நேரடியாக மாற்ற அனுமதி அளித்தால் அப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்பதால், மூலதன மாற்றத்தை (Capital convertability) சிறிது சிறிதாக கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்குள் அந்நியச் செலாவணி வரத்து அதன் பொருளாதார ஏற்புச் சகதியை விட அதிகமானது என்று கூறியுள்ள சுப்பா ராவ், 2010ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதத்தில் அந்நிய நேரடி மூலதன வரத்து 26 விழுக்காடு குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களினால் (Foreign Institutional Investor- FII) வரும் அந்நியச செலாவணி வரத்து ரூபாயில் கணக்கிட்டால் 9.6 இலட்சம் கோடியாக இருந்தது என்றும், அவர்கள் பங்குகளை விற்றுவிட்டு கொண்டு சென்ற நிதி ரூ.7.8 இலட்சம் ரூபாய் என்றும் கூறியுள்ளார்.

இந்த தரவுகளையெல்லாம் கூறிவிட்டு, மூலதன மாற்றை படிப்படியாக மட்டுமே இந்தியாவில் கொண்டு வர முடியும் என்று சுப்பாராவ் பேசியுள்ளார்.

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜனவரி 21ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 299 பில்லியன் டாலர்களாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்