2010ஆம் ஆண்டு உலக வெப்பம் அதிகரிப்பு- உலக வானிலை ஆய்வு மையம்

வெள்ளி, 3 டிசம்பர் 2010 (16:46 IST)
1850ஆம் ஆண்டு முதல் உலகின் அதிக வெப்பநிலை பதிவாகிய 3-வது அதிவெப்ப ஆண்டாக 2010 இருந்துள்ளது என்று உலக வானிலை ஆய்வு மையம் கான்கனில் நடைபெறும் ஐ.நா. வானிலை மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

1850ஆம் ஆண்டுதான் வெப்பநிலைக் கணக்கீடு துவங்கியது. அது முதல் நடப்பு ஆண்டு 3-வது அதிவெப்ப ஆண்டு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாத உலக வெப்பநிலை அளவுகள் 2011ஆம் ஆண்டு துவக்கத்தில் கிடைக்கும் என்பதால் புள்ளிவிவரம் அப்போது மிகத்துல்லியமாகத் தெரியவரும் என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தபோதிலும் 2010ஆம் ஆண்டு அதிவெப்ப ஆண்டாகத் திகழ்ந்துள்ளது.

அதேபோல் 1961ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை, பத்தாண்டுகள் வெப்ப நிலைக் கணக்கெடுப்பில் இருந்ததைக் காட்டிலும் இந்த பத்தாண்டுகளில் உலக வெப்பநிலை 0.46 செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.

இதுதான் ஒரு பத்தாண்டுக் கணக்கெடுப்பில் அதிகபட்ச வெப்பப் பதிவு என்று உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17நாடுகளில் வெப்ப அளவு வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலையின் தாக்கம் இந்த ஆண்டு இருந்துள்ளது.

இந்த வெப்பநிலை உயர்வு மனிதர்கள் ஈடுபடும் தொழிற்துறை உற்பத்தி மற்றும் பிற நடவடிக்கைகளினால் அதிகமாகிய புவிவெப்பமடைதலின் விளைவா என்று உலக வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குனர் மிஷேல் ஜரூத்திடம் கேட்டபோது, அவர், "சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால் "ஆம்" என்றுதான் கூறவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

நாசாவின் உலக வெப்ப அளவுப் பதிவும் 2010ஆம் ஆண்டு உலகின் அதிவெப்ப ஆண்டு என்பதை உறுதி செய்துள்ளது.

இத்தனைக்கும் எல் நினோ விளைவுக்கு பதிலாக புவிக்குளிர்ச்சியடையும் லா நினா விளைவு பலமாக இருந்துள்ளது. அவ்வாறிருந்தும் 2020ஆம் ஆண்டு 2009ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிக வெப்பமடைந்த ஆண்டாக உள்ளது என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மைய பேராசிரியர் டாக்டர் ஆடம் ஸ்கால்ஃப் தெரிவித்துள்ளார்.

கனடா மற்றும் கிரீன்லாந்தில் வழக்கமான வெப்பநிலையைக் காட்டிலும் 2010ஆம் ஆண்டு 3 செண்டிகிரேட் அதிகமடைந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆண்டு சராசரி வெப்பநிலையில் 1-3 செண்டிகிரேட் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் அதிக வெப்ப அளவு பதிவான நாடாக இந்த ஆண்டு பாகிஸ்தான் இருந்து வருகிறது. மொஹெஞ்சதாரோ பகுதியில் ஒரு நாளில் 53.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதுவரை 10 அதிவெப்ப ஆண்டுகள் என்று பதிவு செய்யப்பட்டதில் அனைத்து ஆண்டுகளும் 1996ஆம் ஆண்டிலிருந்தே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப்ப அதிகரிப்பின் விளைவுதான் பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், ரஷ்யாவின் வரலாறு காணாத வெப்ப அலை ஆகியவற்றிற்குக் காரணம் என்று உலக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்