பாலமு சரணாலயத்தில் 6 புலிகளே உள்ளன

செவ்வாய், 2 நவம்பர் 2010 (14:26 IST)
ஜார்கண்டில் உள்ள பாலமு புலிகள் காப்பகத்தில் இன்னும் 6 புலிகளே எஞ்சியுள்ளன. 2003ஆம் ஆண்டு கணக்கின் படி அங்கு 42 புலிகள் இருந்தன.

கடந்த 10 ஆண்டுகளில் இங்கு புலிகள் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வந்துள்ளன. 2003ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 42 புலிகள் இருந்தன. 2005ஆம் ஆண்டில் இது 38ஆகவும் 2007ஆம் ஆண்டு 17ஆகவும் குறைந்து தற்போது 2009ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 6 புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பு டி.என்.ஏ. ஆய்வின் படி செய்யப்பட்டுள்ளதால் அது ஒரு ஒட்டுமொத்தமான பார்வையை நமக்கு அளிக்காது என்று பாலமு புலிகள் சரணாலய கள இயக்குனர் உபாதயா தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காட்டுத் தீ, மாவோயிஸ்ட்கள், அதற்குத் தேவையான இரையின் அளவு குறைந்து போனது, வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புலிகள் எண்ணிக்கை அழிந்து வருகிறது என்று பாலமூ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உபாதயா வேட்டையால் புலிகள் அழிந்து வருகிறது என்ற காரணத்தை மறுத்துள்ளார்.

பாலமு புலிகள் சரணாலயம் 1,014 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இது முக்கியப் பகுதி, நடுநிலைப்பகுதி என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியப் பகுதி என்பது யாராலும் அணுக முடியாத பகுதியாகும். இங்கு மாவோயிஸ்ட்கள் இருப்பதாகவும் காட்டிலாக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்தப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை பற்றி திட்டவட்டமாக எதுவும் கூற இயலாது என்று காட்டிலாக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்