இந்த ஆண்டு புதிதாக 600 மருந்தாளுனர்கள் பதிவுமூப்பு மூலம் விரைவில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு புதிதாக 600 மருந்தாளுனர்கள் பதிவுமூப்பு மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு கல்வித்தகுதி டி.பார்ம். படிப்பு ஆகும்.
சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தலைமை அலுவலகம் மாவட்ட அளவிலான பதிவுமூப்பு பட்டியல் பெற்று, அடுத்த கட்டமாக மாநில சீனியாரிட்டி பட்டியலை தயாரித்து வருகிறது.
வழக்கம்போல் ஒரு காலி இடத்திற்கு 5 பேர் என்ற வீதத்தில் மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பதிவுமூப்பு பட்டியலை சென்னை உள்பட அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.