H-1B விசா: அமெரிக்க நிறுவனங்களுக்கு மேலும் நிர்பந்தம்!

சனி, 21 மார்ச் 2009 (19:43 IST)
அமெரிக்க அரசின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் H-1B விசா மூலம் அயல்நாடுகளில் இருந்து பணியாற்ற வருபவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கக் கூடாதென ஒரு நிபந்தனையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க பொருளாதார பின்னடைவினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்த அமெரிக்க அரசு, பணி வாய்ப்புகள் குறையும் போது முதலில் அயல்நாட்டுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து அமெரிக்க பணியாளர்களைக் காக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை நேற்று மேலும் ஒரு நிபந்தனையை விதித்துள்ளது.

அமெரிக்க மறுமுதலீட்டுச் சட்டத்தின் படியும், புதிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அமெரிக்க பணியாளர்கள் சட்டத்தின் படியும், வரும் நிதியாண்டில் இருந்து (அக்டோபர் 01,2009 முதல்) அமெரிக்க அரசின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் எதுவும் அயல்நாடுகளில் இருந்து (H-1B விசாவின் மூலம்) அமெரிக்காவிற்கு பணிக்கு வருபவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று புதிய நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து பணிக்குச் செல்வோர் பெருமளவிற்கு பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இதுமட்டுமின்றி, அமெரிக்க அரசின் நிதியுதவி பெறும் நிறுவனங்கள் அயல் நாட்டு ஊழியர்களைச் சார்ந்ததாக இருந்தால் அவர்கள் அமெரிக்க தொழிலாளர் துறையிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அந்நிறுவனங்களை அயல்நாட்டு பணியாளர் சார்ந்த நிறுவனங்களாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அமெரிக்க அரசின் நிதியுதவியை பெறாத நிறுவனங்களில் மட்டுமே இதற்குமேல் அயல்நாட்டுப் பணியாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்