3,000 பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்ற அரசு அனுமதி
சனி, 6 ஜூன் 2009 (17:45 IST)
அரசு தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்ற தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த 3 ஆயிரம் ஆசிரியர்களின் துறை மாற்றம் காரணமாக, தொடக்கக் கல்வித்துறையில் ஏற்படும் காலியிடத்தை நிரப்பும் வகையில் புதிய ஆசிரியர் நியமனத்தின் போது இந்தத் துறைக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களில் 3,000க்கும் அதிகமானோர் தங்களை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் மறுப்பில்லா சான்றிதல் (என்.ஓ.சி) அளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த 3,000 ஆசிரியர்களின் துறை மாற்றத்தால் ஏற்படும் காலியிடங்களை பூர்த்தி செய்யும் விதமாக, புதிய ஆசிரியர்கள் தேர்வின் போது தொடக்கக் கல்வித்துறைக்கு அதிக இடங்களைத் தொடக்கக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.