வேலை வாய்ப்பை உருவாக்காத பொருளாதார வளர்ச்சி: ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாற்று
வெள்ளி, 22 ஜூலை 2011 (18:25 IST)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைவருக்கும் பயனளிக்கும் முன்னேற்றத்தை செயல்படுத்தி வருவதாக கூறிவருவது உண்மைக்கு மாறானது என்பதை தேச மாதிரி ஆய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என்று ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ள சரத் யாதவ், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் 8 விழுக்காட்டிற்கு அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது என்று ஐ.மு.கூட்டணி அரசு கூறுவது உண்மையாக இருந்தால் அந்த அளவிற்கு வேலை வாய்ப்பு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை பா.ஜ.க. தலைமையிலான தேச முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 63 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியிருந்தது. ஆனால், 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான ஐ.மு.கூ. ஆட்சியில் 10 இலட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்று தேச மாதிரி ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரி இந்தியனுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்பதற்கு இது அத்தாட்சியாகும் என்று கூறியுள்ளார்.
தேச மாதிரி ஆய்வு அமைப்பு மேற்கொண்ட 66வது ஆண்டு ஆய்வில், ஐ.மு.கூட்டணி அரசு ஆட்சியில் ஆண்டுக்கு 2 இலட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளதை சரத் யாதவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேச முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிரந்தர வேலை உருவாக்கம் 11 மில்லியனாக இருந்தது. அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 5.8 மில்லியனாக குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, இதே ஆண்டுகளில் நிரந்தரமற்ற வேலை வாய்ப்புகள் 21.5 மில்லியனாக உயர்ந்துள்ளது என்றும் சரத் யாதவ் சுட்டிக்காட்டியுள்ளார்.