வேலை வாங்கித் தருவதாக மோசடி

புதன், 4 மார்ச் 2009 (17:41 IST)
வேலை வாய்ப்புகளை வழங்கும் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தவர்களது விவரங்களை அடிப்படையாக வைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு இணைதளத்தில் பலர் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர்.

அதன்படி பொறியியல் படித்த ஒரு இளைஞருக்கும், பெண் ஒருவருக்கும் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில் பிரபல கணினி நிறுவனத்திற்காக ஆட்கள் தேர்வு செய்யும் குழு என்றும், முதல் கட்ட நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அதற்கு ரூ.18 ஆயிரம் கட்ட வேண்டும் என்றும், தனது பெயர் அய்யர் என்றும் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.

இதனை நம்பி அந்த இருவரும் சென்னைக்கு வந்து ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அய்யருக்கு செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது, தற்போது என்னுடைய அலுவலக ஆள் வருவார் என்றும், அவரிடம் பணத்தை கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

அதன்படியே இருவரும் வந்த ஆளிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நபரை தங்களது செல்பேசியில் ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர்.

அதன்பிறகு அய்யரை தொடர்பு கொண்டு பேசியபோது, என்னை நம்பி காத்திருக்காதீர்கள். ஊருக்கு செல்லுங்கள், காவல்துறையிடம் சென்றாலும் பயன் ஏதும் இல்லை. என்னை கண்டுபிடிக்க முடியாது என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

அவர்கள் இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஒரு துப்பறியும் அதிகாரியிடம் தங்களது நிலையை கூறியுள்ளனர். துப்பறியும் அதிகாரியும், அவர்களிடம் இருந்து சில விவரங்களை வாங்கிக் கொண்டு அவர்களை நம்பிக்கைக் கூறி ஊருக்கு அனுப்பிவைத்தார்.

பின்னர் அவர் தொடர்ந்து செய்து வந்த முயற்சியின் பலனாக, அவர்களது விவரங்களை அந்த அதிகாரி கண்டறிந்தார்.

அதன்பிறகு அந்த அதிகாரி சென்னை நகர காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் தான் கண்டுபிடித்த அனைத்து தகவல்களையும் அவரிடம் கூறி, மேற்கொண்டு விசாரணை நடத்தி அந்த கும்பலை பிடிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

இது பற்றி அந்த இரண்டு பொறியாளர்களுக்கும் தெரிவித்திருந்தார்.

ஆனால், 2 மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மோசடி கும்பல் இதுபோன்ற செயல்களை மேலும் எத்தனை பேரிடம் செய்துள்ளதோ? இன்னும் எத்தனை சதி திட்டங்களை தீட்டியுள்ளதோ? அவர்களை பிடிக்காமல் போனாலும், நாம் எச்சரிக்கையாக இருப்பது ஒன்றுதான் தற்காலிக முடிவாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்