சுயதொழில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்

சனி, 20 டிசம்பர் 2008 (13:22 IST)
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் கீழ் சுயதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆ‌ட்‌சி‌த்தலைவ‌ர் ராஜேந்திரரத்னூ தெரிவித்துள்ளார்.

இதுதொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், "மாவட்ட தொழில்மையத்தின் மூலம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டம் (பி.எம்.ஆர்.ஒய்.) மற்றும் கதர், கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.) மூலம் நடை முறைப்படுத்தப்பட்ட ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய 2 திட்டங்களையும் ஒருங்கிணைத்து புதிதாக 'பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டம்' என்ற திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. குறுந்தொழில்களை தொடங்கி அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மாவட்ட தொழில்மையம், கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஆகிய துறைகள் மூலம் 'ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் அமலாக்க முகமையாக செயல்படும்.

இந்த திட்டத்தில் பொதுவகை பிரிவில் பயனாளிகளின் பங்கு 10 ‌விழு‌க்காடு ஆகும். திட்ட மதிப்பில் நகர பகுதியை சேர்ந்தவர்களுக்கு 15 ‌விழு‌க்காடு‌ம், ஊரக பகுதியை சேர்ந்தவர்களுக்கு 25 ‌விழு‌‌க்காடு‌ம் மானியம் வழங்கப்படும்.

அதே போல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு வகையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பயனாளிகளின் பங்கு 5 ‌விழு‌க்காடஆகும். திட்ட மதிப்பில் நகர பகுதியை சேர்ந்தவர்களுக்கு 25 ‌விழு‌க்காடு‌ம், ஊரக பகுதியை சேர்ந்தவர்களுக்கு 35 ‌விழு‌க்காடு‌ம் மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பீடு உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், சேவை வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் பயன் அடைய வருமான வரம்பு எதுவும் கிடையாது. மேலும், 18-வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு மேலாக உள்ள உற்பத்தி தொழில்களுக்கும், ரூ.5 லட்சத்துக்கு மேலாகவுள்ள சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 8ஆ‌ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

தனிநபர் சுயஉதவிக் குழுக்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர். ஆனாலும் அரசின் ஏதாவது ஒரு திட்டதின் கீழ் மானியத்துடன் கூடிய சலுகை பெற்ற யாரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

இறைச்சி தொடர்புடைய தொழில்கள், போதïட்டும் இனங்கள் உற்பத்தி, ஓட்டல் மற்றும் தபா, பயிர்கள் உற்பத்தி, தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, பூ வளர்த்தல், மீன், பன்றி மற்றும் கோழி வளர்ப்பு போன்ற கால்நடை பராமரிப்பு, அறுவடை எந்திரம், 20 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகள் உற்பத்தி, நெசவு மற்றும் கையால் திரித்தல், ஊரக போக்குவரத்து ஆகிய தொழில்களுக்கு பொருந்தாது.

இதற்கான விண்ணப்பம் பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர், உதவி இயக்குநர் (கதர் மற்றும் கிராமத் தொழில்கள்), சிட்கோ தொழிற்பேட்டை செம்மண்டலம், கடலூர் ஆகிய அலுவலகங்களில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்த பின் இவற்றில் ஏதாவது ஒரு அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் திட்ட அறிக்கை, இயந்திர சாதனங்களின் விலைப்புள்ளி, கட்டிடத்துக்கான மதிப்பீடு மற்றும் வரைபடம் இடத்துக்கான பத்திர நகல் அல்லது வாடகை பத்திர நகல், சாதி சான்று (ஆண்களுக்கு மட்டும்), குடு‌ம்ப அ‌ட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்று மற்றும் பயிற்சி முடித்ததற்கான சான்று ஆகியவற்றை அனுப்ப வேண்டும். பின்னர் இந்த விண்ணப்பங்கள் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ரி‌ன் தலைமையிலான மாவட்ட குழு நேர்காணல் மூலம் பரிசீலித்து வங்கிக்கு பரிந்துரை செய்து மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்