தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. போன்ற தன்னாட்சி பெற்ற அரசு பணியாளர் தேர்வாணையங்கள் புதிதாக ஊழியர்களை தேர்வு செய்ய தடை ஏதும் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்திற்கான மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பணியிட மாற்றம், பதவி உயர்வு, ஊழியர் தேர்வு உள்ளிட்ட வழக்கமான பணிகளையும் துறை தலைமை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
அரசு தொடக்க பள்ளிகளில் சுமார் 5,700 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்யப்பட இருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அந்த நியமனத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் நாள் அறிவிப்புக்கு முன்னரே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணி நியமனங்களை தொடர்ந்து மேற்கொள்ளலாமா? புதிதாக அரசு ஊழியர்களை தேர்வு செய்யலாமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தன்னாட்சி பெற்ற அரசு தேர்வாணையங்கள் தாங்கள் வழக்கமாக மேற்கொண்டு வரும் பணி நியமனங்களை தொடர்ந்து செய்யலாம். ஆனால், அதுபோன்ற தன்னாட்சி பெறாத அரசு அமைப்புகள் புதிதாக பணி நியமனம் மேற்கொள்வதாக இருந்தால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்புகளான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.பி.), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) போன்றவை அரசு ஊழியர்களை தேர்வு செய்ய எவ்வித தடையும் இல்லை என்று அந்த தேர்வாணையங்களுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை அடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், எவ்வித நியமன பணிகளையும் மேற்கொள்ள முடியாது. டி.என்.பி.எஸ்.சி. போல் ஆசிரியர் தேர்வு வாரியம் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஓர் அமைப்பு அல்ல. எனவே, தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று, வேண்டுமானால் பணி நியமனங்களைச் செய்யலாம். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனத்தையும் தேர்தல் நடத்தை விதிமுறை கட்டுப்படுத்து என்று கூறப்பட்டுள்ளது.