அக்கவுண்டன்சியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு: ICWAI அறிமுகம்

திங்கள், 6 ஜூலை 2009 (17:58 IST)
இந்தியாவில் இளநிலை கணக்காளருக்கு அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு இக்வாய் (Institute of Cost and Works Accountants of India- ICWAI) அமைப்பு ஓராண்டு சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

அடிப்படையான கணக்கியல் திறமைகளை உள்ளடக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சான்றிதழ் படிப்பில் பிளஸ் 2 தேறியவர்கள் சேர முடியும்.

சர்டிபிகேட் இன் அக்கவுண்டிங் டெக்னீசியன்ஸ் Certificate in Accounting Technicians-CAT) என்ற பெயரில் வழங்கப்படும் இந்த சான்றிதழ் படிப்பில் கணினிப் பயிற்சி (60 மணி நேரம்), 6 மாத கால நடைமுறைப் பயிற்சி மற்றும் 15 நாள் ஓரியன்டேஷன் பயிற்சியும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேறியவர்கள் முதல்நிலை (Foundation Course - Entry Level) படிப்பில் நேரடியாகச் சேரலாம். முதல்நிலை படிப்பை முடித்தவர்கள் மற்றும் ICWAI மாணவர்கள் மட்டுமே 2ஆம் நிலைப் (Competency Level) படிப்பில் சேர முடியும்.

இந்த சான்றிதழ் படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள், ரீடெய்ல் துறை, பி.பி.ஓ., போன்ற துறைகளில் சிறப்பான வேலைவாய்ப்பைப் பெற முடியும்.

இதுமட்டுமின்றி பஞ்சாயத்துகளின் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது, ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான கோப்புகளை தயாரிக்கும் பணியையும் அவர்கள் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள், கட்டணங்கள் தொடர்பான விவரங்களை icwai.org/icwai/academic-cat.asp என்ற இணையதளத்தில் பெறலாம். தமிழகத்தில் பழநி, துடுப்பதி, வேலூர் ஆகிய இடங்களில் இந்த சான்றிதழ் படிப்புக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் செயல்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்