மோடி விழாவில் பங்கேற்ற பாடகி லதா மங்கேஸ்கர் அரசியல் வலையில் சிக்கிவிடக்கூடாது - காங்கிரஸ் கருத்து

வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:19 IST)
பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டார். இதனால் காங்கிரஸ் கட்சி லதா மங்கேஸ்கர் அரசியல் வலையில் சிக்கிவிடக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளது.
FILE

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்தி நடிகர்களின் கவர்ச்சியை தன் பக்கம் கவரும் முயற்சியில் இறங்கியுள்ளார். நடிகர் அமிதாப் பச்சனை குஜராத் மாநில சுற்றுலா வளர்ச்சி தூதராக நியமித்தார்.

அதன்பிறகு அகமதாபாத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவுக்கு நடிகர் சல்மான்கானை அழைத்து வந்து அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது சல்மான்கான் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இதனால் சல்மான்கான் படங்களை புறக்கணிக்குமாறு ஒரு முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சியில் நரேந்திர மோடியுடன் லதா மங்கேஸ்கர் பங்கேற்றார். லதா மங்கேஸ்கருக்கு மோடி நினைவுப்பரிசு வழங்கினார். இதுவும் அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:-

லதா மங்கேஸ்கர் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி. அவர் நம் நாட்டின் புகழ்பெற்ற பிரபலங்களில் ஒருவர். இனிமையான குரலால் பல வருடங்களாக மக்களின் இதய சிம்மாசனத்தில் குடி கொண்டு வருகிறார். அவர் நம் நாட்டின் சொத்து.

ஆனால் அவரது நடவடிக்கைகள் அரசியல் சாயத்துக்கு இடம் கொடுக்காத வகையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர் மற்றவர்களின் அரசியல் லாபத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது. அரசியல் வலையில் சிக்கிவிடக்கூடாது.

இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்