நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் - நடிகர் கார்த்திக்

சனி, 25 ஜனவரி 2014 (15:57 IST)
FILE
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் எவ்வளவு தமாஷ்கள்தான் நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் பொதுத் தேர்தலில் தமாஷ் செய்வது பொறுப்பற்ற செயலாகவே படுகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள திருமணமண்டபத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளார் சாந்தி பூஷன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான கார்த்திக் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலின் போது மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மூடி மறைக்கவே தற்போது நடு ரோட்டில் போராட்டம் நடத்துகின்றனர். இது அரசியலுக்கே தவறான முன் உதாரணமாகும்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் வாக்காளர்களுக்கு அதிக பொறுப்பு உணர்வு உண்டு. காரணம் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளும் மக்கள் கட்சி உருவாக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகின்றன. அப்போது இல்லாத சந்தோஷம் இப்போது எனக்கு உள்ளது. இதற்கு காரணம் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தேன். ஆனால் என் கட்சி தொண்டர்கள் என்னை போட்டியிட வற்புறுத்துவதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன். கூட்டணி குறித்து என்னிடம் மற்ற கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதை முறைப்படி உரிய நேரத்தில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனைக்கூட்டம் முடிந்தபிறகு, கார்த்திக் மதுரைக்கு காரில் புறப்பட்டார். அவரது கார் மீது சிலர் கல் வீசினர்.

இதில் மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் பெருமாள், கார்த்திக் ஆகியோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக திருநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்