தாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட மகன்' - ஸ்பெயின் அதிர்ச்சி

சனி, 24 ஏப்ரல் 2021 (00:32 IST)
தமது தாயை கொலை செய்து அவரது உடல் எச்சங்களை வெட்டி சாப்பிட்டதாக ஸ்பெயினில் ஒரு நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
 
ஆல்பர்டோ சஞ்சேஸ் கோமெஸ் எனும் அந்த நபர் 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.
 
66 வயதாகும் அவரது தாய் மரியா சோலேடாட் கோமெஸ் நலன் குறித்து அவரது நண்பர் ஒருவர் கவலை எழுப்பி இருந்ததால் அந்த பெண்ணின் வீட்டுக்கு காவல்துறை சென்று சோதனையிட்டது.
 
அவர் கொல்லப்பட்டது தெரிந்த பின்பு ஆல்பர்டோ கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போது ஆல்பர்டோவுக்கு வயது 26.
 
கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் தமது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் அவரது உடல் பாகங்களை உண்டதாகவும் காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்று செய்திகள் வெளியாகின.
 
தாயின் இறந்த உடலை 10 ஆண்டுகள் ஃப்ரிட்ஜில் வைத்திருத்த பெண்
கடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற இந்தோனீசிய கிராமம்
அவரது தாயின் உடல் பாகங்கள் சிலவற்றை நாய்க்கு உணவாக வீசியதாகவும் அவர் அப்போது தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அடுக்குமாடி குடியிருப்பு வீடு முழுவதும் அந்த பெண்ணின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும் சில உடல் பாகங்கள் சிறு பிளாஸ்டிக் பெட்டகங்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
கைதுசெய்யப்பட்டுள்ள ஆல்பர்டோ தமது தாயை கொலை செய்ததும், அவரது உடலை உண்டதும் பற்றி எதுவும் நினைவில்லை என்று தற்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
அவரது கைதுக்கு முன்பு அவருக்கு மனநல பாதிப்பு மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
உயிரிழந்த அவரது தாயான மரியாவுக்கு எதிராக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ஆல்பர்டோ குறித்து காவல் துறையினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது என்று ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
அவரது வன்முறைச் செயல்கள் காரணமாக, உயிரிழந்த மரியாவை ஆல்பர்டோ சென்று சந்திக்க கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
அதையும் மீறி அவர் தமது தாய் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். மரியா தலைநகர் மேட்ரிட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
 
சில உடல் பாகங்கள் சமைக்கப்படும் நிலையில் வைக்கப்பட்டிருந்தன என்றும் சில சேமித்து வைக்கப்பட்டு இருந்தன என்றும் எல் முண்டோ எனும் செய்தித்தாள் தெரிவிக்கிறது.
 
இன்னும் இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீர்ப்பு எதுவும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்