இக்னோவில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் அறிவிப்பு

செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (16:31 IST)
தனியார் கல்வி மையங்கள் வாயிலாக, இக்னோவில் பொறியியல் படிப்பில் பட்டம், பட்டயப் படிப்பு வழங்கும் திட்டத்திற்கான கல்விக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கல்வி அறக்கட்டளை (செபட்) என்ற அமைப்புடன் இணைந்து பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) வழங்க உள்ளது.

இத்திட்டத்தை சென்னை நகர மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதுகுறித்து இக்னோ-செபட் குழுவின் நிர்வாக இயக்குநர் என். சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இக்னோ உடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தனியார் கல்வி மையங்களில் படிப்பை வழங்குவதற்கான பாலமாக செபட் அறக்கட்டளை செயல்படும்.

இப்படிப்புகளை வழங்க இதுவரை 104 தனியார் கல்வி மையங்கள் முன்வந்துள்ளன. இவற்றில் தனியார் பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். மேலும் பல கல்வி மையங்களும் ஆதரவு அளிக்க உள்ளன.

இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்கான நுழைவுத்தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். ஆண்டு இருமுறை (ஜனவரி, ஜூலை) மாணவர் சேர்க்கை நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டு பட்டப்படிப்பில் சேர பிளஸ்-2விலும் (கணிதம், இயற்பியல், வேதியியல்), 3 ஆண்டு பட்டயப் படிப்பில் சேர 10ஆம் வகுப்பிலும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

பட்டப்படிப்பில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரமும், பட்டயப்படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரமும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும். வகுப்புகளை நடத்துவதற்கான ஆசிரியர்களை அந்தந்த கல்வி மையங்களே நியமித்துக் கொள்ளும். மாணவர்களுக்கு தேர்வு நடத்தி இக்னோ சான்றிதழ் வழங்கும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்