MBA, M.Sc. படிப்புகளை அண்ணா பல்கலை. நடத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

சனி, 8 ஆகஸ்ட் 2009 (12:09 IST)
MBA, MCA மற்றும் M.Sc., உள்ளிட்ட பொறியியல் அல்லாத படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொறியியல் அல்லாத படிப்புகளை சென்னை, கோவை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் சிவக்குமார், மணிசுந்தர் கோபால் ஆஜராகி, “பொறியியல் அல்லாத எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் இதர டிப்ளமோ படிப்புகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அங்கீகாரம் தேவையில்லை” என்றனர்.

கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் முரளிகுமரன் ஆஜராகி, “கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும” என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில், பொறியியல் அல்லாத படிப்புகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக சட்டத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற்றுதான் இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை.

எனவே பொறியியல் அல்லாத எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தலாம். இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை நிராகரிக்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்