M.B.B.S. படிப்பில் சேர 14,820 பேர் விண்ணப்பம்

வியாழன், 18 ஜூன் 2009 (17:36 IST)
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 14,820 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1,483 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 10 மடங்கு மாணவர்கள் அதற்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, சேலம் உட்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 எம்.பி.பி.எஸ். (M.B.B.S) இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர்களைச் சேர்க்க கடந்த 3ஆம் தேதி விண்ணப்பங்களை வினியோகிக்கும் பணி துவங்கியது. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நேற்று (ஜூன் 17) கடைசி நாளாகும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் சேர மொத்தம் 15,500 மாணவர்கள் விண்ணப்பம் வாங்கினர். இவர்களில் 14,820 பேர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களை (1,483) ஒப்பிடும்போது, சுமார் 10 மடங்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 12,655 மாணவர்கள் மட்டுமே M.B.B.S. படிப்பில் சேர விண்ணப்பித்தனர்.

பொதுப்பிரிவுக்கு 14,091 பேரும், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளில் உள்ள 51 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 393 பேரும், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கு உள்ள 3 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 118 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

மொத்தம் விண்ணப்பித்த 14,820 பேரில், 118 பேர் மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஜூன் 19ஆம் தேதி சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும். மாணவர்களின் மதிப்பெண் கூட்டுத் தொகை சமமாக உள்ள மாணவர்களை வரிசைப்படுத்த இந்த சமவாய்ப்பு எண் வழங்கும் முறை உதவுகிறது.

இதைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கவுன்சலிங் வரும் ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்