விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு தற்காலிக ஒப்புதல்: சென்னை பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன், 29 அக்டோபர் 2009 (15:35 IST)
சிறுபான்மை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 150 விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் தற்காலிக ஒப்புதல் வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல்வேறு சிறுபான்மை கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்கள் கல்லூரிகளில் தகுதியுடைய விரிவுரையாளர்கள் மற்றும் முதல்வர்களை நியமித்துள்ளோம்.
இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை பல்கலைக்கழகத்திற்கு மனு அனுப்பினோம். ஆனால் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. ஆகவே நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கும், முதல்வர்களுக்கும் ஒப்புதல் வழங்கும்படி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் கே.ரவிராஜபாண்டியன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். இதன்பிறகு நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், “மனுதாரர்களின் கோரிக்கையை வழக்கின் இறுதி விசாரணைக்கு பிறகுதான் முடிவெடுக்க முடியும். எனினும், 150 விரிவுரையாளர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
நியமனம் ஒப்புதல் வழங்கப்படாததால் இன்னும் இவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் கடந்த மாதம் சிண்டிகேட் முடிவெடுத்த தீர்மானத்தை கருத்தில் கொண்டும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. விரிவுரையாளர்கள், முதல்வர்கள் நியமனத்திற்கு பல்கலைக்கழகம் தற்காலிக ஒப்புதல் வழங்க வேண்டும். இது இறுதி தீர்ப்பை கட்டுப்படுத்தும்.
இந்த வழக்கில் கல்லூரிகள் வெற்றி பெறவில்லை என்றால் விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள தொகையை விரிவுரையாளர்களோ அல்லது கல்வி நிறுவனமோ அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தும்” எனக் கூறப்பட்டுள்ளது.