மாணவர்களுக்கு தண்டனை அளிக்கக் கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை

வெள்ளி, 12 ஜூன் 2009 (16:03 IST)
மாணவர்களை அடிப்பது, வெயிலில் நிற்க வைப்பது, தலையில் குட்டுவது போன்ற எந்தவித தண்டனையும் ஆசிரியர்கள் அளிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 4,200 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 1,600 அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 70 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

விடுமுறை முடிவடைந்து தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோரிடம் இருந்து பள்ளி கல்வித்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை வசூலிக்கப்படுகிறது, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை வெயிலில் நிற்க சொல்லி தண்டனை கொடுக்கிறார்கள், பிரம்பால் அடிக்கிறார்கள், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 சான்றிதழ் வழங்கவும், மாற்று சான்றிதழ் வழங்கவும் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது உட்பட 65 வகையான புகார்கள் வந்துள்ளன.

மாணவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம் என்று அரசாணை ஏற்கனவே இயற்றப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறியும் மாணவர்கள் அடிக்கப்படுகிறார்கள் என்று புகார் வந்துள்ளதால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

அதில் எந்த ஒரு மாணவரையும் அடிக்கக்கூடாது. வெயிலில் நிற்கவைத்தல், முதுகில் செங்கலை சுமக்க வைத்தல், தலையில் குட்டுதல் உள்ளிட்ட எந்த ஒரு தண்டனையையும் கொடுக்கக்கூடாது.

பள்ளியில் உள்ள வேலைகளை மாணவர்களைக் கொண்டு செய்யக்கூடாது. மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை வாங்குவது குற்றமாகும். மேலும் மாற்று சான்றிதழ் கொடுக்கும் போதும் பணம் வாங்கக்கூடாது. பள்ளிகளில் மேற்கண்ட எந்த குற்றமாவது நடக்கிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலித்ததால், அதேபோல எந்த பள்ளியிலும் வசூலிக்கக்கூடாது என்பதற்காக இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்