பி.எட்., படிப்புக்கான கலந்தாய்வு இடமாற்றம்

வெள்ளி, 26 ஜூன் 2009 (12:16 IST)
நடப்பாண்டுக்கான பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடத்தப்படுகிறது. லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக கலந்தாய்வு நடைபெறும் இடம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்தாண்டு உருவாக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி (பி.எட்.,) கல்லூரிகளுக்கென தனியாக துவக்கப்பட்டு, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்லூரியில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடத்தத் தேவையான அலுவலர்கள் இல்லாததால், அங்கு கலந்தாய்வு நடத்தும் திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் அலுவலகத் தேவைக்காக லேடி வெலிங்டன் கல்லூரியின் சில அறைகள் எடுத்துக் கொள்ளப்பட்டதால், இந்த ஆண்டும் அங்கு கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கடந்தாண்டு லேடி வெலிங்டன் கல்லூரியில் நடந்த விரிவுரையாளர் இடமாறுதல் கலந்தாய்வு, இந்தாண்டு காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல் பி.எட். கலந்தாய்வை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு ஜூலை 2வது வாரத்திற்கு பின் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்