இன்று கல்வி வளர்ச்சி நாள்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (11:48 IST)
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் கொண்டாடப்படுகிறது.

'கல்விக் கண் திறந்த கர்ம வீரர்' என்று போற்றப்படும் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 106-வது பிறந்த நாள் இன்று (ஜூலை 15-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

இதனை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 'கல்வி வளர்ச்சி நாள்' இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி மாணவ-மாணவிகள் இடையே காமராஜரின் சிறப்புகளை விளக்கச் செய்யும் இசை, மாறுவேடம், கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ. 100-ம், இரண்டாவது இடம் பெருபவருக்கு ரூ.75-ம், மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவருக்கு முறையே ரூ. 50-ம் பரிசாக அளிக்கப்படுகிறது.

கருணாநிதி, ஸ்டாலின் மரியாதை:

சென்னை, ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு, காமாராஜரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

சென்னை, அண்ணாசாலை பல்லவன் இல்லம் அருகே இன்று காலை நடந்த காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி மற்றும் சடமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்