தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. அதற்குள் களை கட்டிவிட்டது பட்டாசு விற்பனை. பட்டாசு கடைகளில் பெரியவர்கள் வந்துதான் பட்டாசு வாங்குவார்கள், ஆனால் குழந்தைகளும் கூட வந்து வாங்கும் அளவுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
webdunia photo
WD
தற்போது மழை காலம் என்பதால் சில இடங்களில் விற்பனை மந்தமாக உள்ளது. தி.நகரில் பட்டாசு கடைகளை காண முடியவில்லை. புரசைவாக்கத்தில் ஒரு சில கடைகளே உள்ளன. தற்போது மிகவும் களை கட்டி இருப்பது பிராட்வேதான்.
இதனால் கடை வைத்தால் எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சாலையோர வியாபாரிகள் யோசிக்க தொடங்கியுள்ளனர்.அதனால் தான் சென்னையில் தற்போது அதிகமாகக் கடைகளைக் காண முடியவில்லை.
பட்டாசு உற்பத்தி குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இது குறித்து சென்னையில் பட்டாசு விற்பனை கடை உரிமையாளர் எஸ்.முகமத் சாகிப் கூறுகையில், பட்டாசு மொத்த விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 32 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில்லரை விற்பனையில் 50 விழுக்காடு வரை பட்டாசு விலை உயர்ந்துள்ளது என்றார்.
இது தீபாவளி நெருங்க, நெருங்க விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். இதுதவிர, பட்டாசு சப்ளையும் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் பட்டாசு விலை குறைய வாய்ப்பே இல்லை என்று அவர் தெரிவித்தார்.
குழந்தைத் தொழிலாளர்களைக் குறைப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததால், சிவகாசி பகுதியில் உள்ள ஆலைகளில் பொதுவாகவே இந்த ஆண்டு உற்பத்தி குறைவாகவே இருந்தது. அதுமட்டுமின்றி இடையிடையே பெய்த மழையும் உற்பத்தியை குறைத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போது, உற்பத்தி சுத்தமாக நின்றுவிட்டது. தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தி இல்லை. எனவே, இருப்பதை வைத்துத்தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது என்று பிராட்வேயில் உள்ள பட்டாசு விற்பனை கடை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார்.