நாம் தீபாவளிக்கு முன்பே பட்டாசுகளை வாங்கிக் குவித்துவிட்டு அதனை வெடிக்கத் துவங்கிவிடுவோம். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதையே முழு நேர வேலையாகக் கொள்வோம்.
ஆனால் வட இந்தியர்கள் தீபாவளியை 5 நாட்களுக்குக் கொண்டாடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தன்வந்தரி திரியோதசை (முதல் நாள்)
கார்த்திகை மாதத்தில் வரும் திரியோதசை அன்று தீபாவளியின் முதல் நாள் கொண்டாட்டம் துவங்குகிறது. அன்றைய தினத்தை தன்வந்தரி திரியோதசை என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் தன்வந்தரி மக்களுக்கு நீண்ட ஆயுளுக்கான இயற்கை மருந்தை அளிப்பதாக நம்பப்படுகிறது. சூரியன் அஸ்தமனமாகும்போது குளித்து முடித்து விளக்கேற்றி பூஜைகள் செய்து இனிப்பை நைவேதனம் செய்கின்றனர்.
நரக் சதுர்தசி (இரண்டாம் நாள்)
கார்த்திகை மாதத்தில் கிருஷ்ணபட்சத்தின் 14வது நாள்தான் சதுர்தசி. இதனை நரக் சதுர்தசி என்று கொண்டாடுகின்றனர். இன்று தான் கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து உலக மக்களை பயத்தில் இருந்து நீக்கினார். அதனால் அன்றைய தினம் தீயவை அழிந்து நல்லவை பிறந்ததாகக் கருதி வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபடுகின்றனர்.
தீபாவளி (மூன்றாம் நாள்)
webdunia photo
WD
இன்று தான் நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை. நரகாசுரன் இறந்ததை அடுத்து இன்று அதிகாலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் வைத்துக் குளித்து புத்தாடை அணிந்து புஜைகள் செய்கின்றனர். பின்னர் இனிப்பு சாப்பிட்டு பட்டாசுகளை வெடித்து நரகாசுரன் இறந்ததை மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் லஷ்மியை வரவேற்கும் விதமாக இல்லங்கள் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கின்றனர்.
கோவர்தன் பூஜை (நான்காம் நாள்)
தீபாவளிக்கு மறுநாள் கோவர்தன் பூஜை செய்யப்படுகிறது. கிருஷ்ணர் கோவர்தன மலையை தூக்கிப் பிடித்து நிறுத்தியதை நினைவு கூரும் வகையில் இந்த பூஜையை காலங்காலமாக மக்கள் செய்து வருகின்றனர். ராமன் பாலம் கட்டியபோது ஹனுமான் கோவர்தன மலையை தூக்கிச் சென்றராம். அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதால் ஓரிடத்தில் அந்த மலையை வைக்கும்போது, ஹனுமனிடம் மலை கேட்டதாம், என்னை ஏன் இங்கே வைத்துவிட்டுச் செல்கிறாய் என்று. அதற்கு, ராமர் அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுத்து இங்கே வந்து உன்னை தூக்குவார், அதுவரை இங்கே காத்திரு என்று பதிலளித்தாராம். அதன்படியே கிருஷ்ணர் கோவர்தன மலையை தூக்கிப் பிடித்து மக்களுக்கு காட்சியளித்ததையே கோவர்தன பூஜையாக வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.
சகோதரிகள் தினம் (ஐந்தாம் நாள்)
ரக்ஷா பந்தன் என்பது சகோதரர்கள் தினம் என்றால் இது சகோதரிகள் தினமாகும். அதாவது ப்ரத்ரி தூஜ்.
மறைந்த நரகாசுரன் (எமன்) தனது தங்கையான யமுனாவை வந்து சந்திப்பதே இந்த ப்ரத்ரி தூஜ் என்ற விழாவாகும். இன்றைய தினம் சகோதரர்கள் தங்களது சகோதரிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் நலம் விசாரிக்கும் தினமாக கடைபிடிக்கின்றனர். சகோதரிகளும் தங்களது சகோதரர்களின் நலன், வெற்றிக்காக பூஜைகள் செய்கின்றனர்.