தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக இருந்து வருகிறது.
தீபாவளியன்று அதிகாலையில் மேற்கொள்ளப்படும் எண்ணெய்க் குளியலை `கங்கா ஸ்நானம்' என்று கூறுகிறோம்.
அஞ்ஞானம் என்னும் `இருள்' மறைந்து மெய்ஞானம் என்னும் `ஒளி' பிறப்பதை உணர்த்தும் வகையில் அதிகாலையில் இருள் மறைந்து வெளிச்சம் தோன்றும் போது இந்தப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.
நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்.
தீபாவளி அன்று எண்ணெயில் தனத்திற்கு அதிபதியான லஷ்மியும், வெந்நீரில் கங்காதேவியும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே தான் இந்த எண்ணெய்க் குளியலை `கங்கா ஸ்நானம்' என்று கூறுகிறோம்.
கங்கை நதியில் குளிப்பதற்கு ஒப்பாக தீபாவளி எண்ணெய்க் குளியல் கருதப்படுகிறது. இந்த நாளில் காசியிலுள்ள கங்கையாற்றில் நீராடி அங்குள்ள விஸ்வநாதர் - விசாலாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதையும் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தீபாவளி அன்று வீட்டின் பல பகுதிகளிலும் தீபங்களை ஏற்றிவைத்து மகாலஷ்மியை தியானித்து வழிபட வேண்டும். மாலையில் வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றிவைத்தல் அவசியம். தீபாவளி அன்று குறைந்தது 21 விளக்குகளையாவது ஏற்றிவைக்க வேண்டும் என்பது மரபு.
புதிய பொருட்களை வாங்குவதற்கும், வர்த்தக, வியாபார நிறுவனங்களை தொடங்குவதற்கும் உகந்த நாளாக தீபாவளி கருதப்படுகிறது. சிலர் இந்த நாளில் தங்கள் நிறுவன கணக்குகளையும் புதிதாகத் தொடங்குவார்கள்.
புதிய நகைகள் வாங்குவது, புதிய ஆடைகள் வாங்குவது உள்பட இனிப்புகள், பலகாரங்களுடன் இந்த பண்டிகையை உவகைபொங்க கொண்டாடுகிறோம். தீமை அழிந்து மகிழ்ச்சி ஏற்பட்ட நாளைக் குறிக்கும் விதமாகவே தீபாவளி நாளில் பட்டாசுகளையும் ஒளிரச் செய்து மகிழ்கிறோம்.
தீபாவளிப் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்துவிடுவதுடன் இரவிலும் அதிக நேரம் கழித்தே தூங்கச் செல்கிறோம்.
வனவாசத்திற்குப் பின்னர் ராமர் மீண்டும் அயோத்தி வந்து அரச பொறுப்பை ஏற்ற நாளாகவும், தீபாவளி கொண்டாடப்படுகிறது.