தீபாவளி - வடக்கிலும் தெற்கிலும்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (16:58 IST)
webdunia photoWD
தீபாவளிப் பண்டிகையின் அடிப்படையே கெட்ட சக்திகள் விலகி தனிமனிதர், சமூக வாழ்க்கையில் அமைதியும் சுபிட்சமும் ஏற்படுவதற்கான துவக்கமாக கருதப்பட்டு நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை இறையொளியின் அம்சமாக தீபங்களாக ஏற்றிவைத்து வழிபடுவது நமது நாட்டில் தீபாவளித் திருநாளன்று தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எங்கும் ஒளிபிறந்து அறியாமை, அகங்காரம், கோபம் போன்ற எதிர்குணங்கள் அழிய வேண்டும் என்பதே தீப ஒளி ஏற்றி கொண்டாடுவதன் அர்த்தமாகும் என்று ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கூறியுள்ளார்.

தீபங்களை ஏற்றி தீபாவளியைக் கொண்டாடும் பழக்கம் நமது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுவதில்லை எனினும், ராஜஸ்தான், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு வீடும் ஒளியாமல் மிளிரும் அளவிற்கு தீபங்களை ஏற்றுகின்றனர்.

தீபாவளி அன்று லக்ஷ்மி, குபேர புஜை செய்வது விசேடமாகும். ஐப்பசி மாத சதுர்தசி திதியில் இப்பூஜையை செய்வது மிகுந்த பலனளிக்கக் கூடியது.

இதைப்போலவே, கேதார கெளரி விரதமும் ஆகும். சிவனை நோக்கி அம்பாள் தவம் இருந்து வழிபட்ட முக்கிய நாள் இதுவென்பதால், தங்களின் கணவரின் நலன் வேண்டியும், நீடு வாழவும் பிரார்த்தித்து சுமங்கலி பெண்கள் விரதமிருக்கும் நாள் கேதரா கெளரி விரதமாகும்.

நமது நாட்டில் மழைக்காலம் துவங்கி ஆறுகளில் புதுவெள்ளம் வந்த பிறகு அதில் நீராடுவது உடலிற்கும், மனதிற்கும் நன்மை பயப்பது என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. அதுவும் தீபாவளி திருநாளில் நமது நாட்டின் புனித நதிகளில் தலையாயதான கங்கையில் குளிப்பது மிகுந்த புண்ணியமளிப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் தீபாவளி திருநாளில் வட மாநிலங்களில் கங்கா ஸ்னானம் ஆனதா என்று கேட்டுத்தான் தீபாவளி வாழ்த்து கூறுகின்றனர்.

நமது தமிழ்நாட்டில் மார்கழி இறுதி நாளை போகிப் பண்டிகையாகக் கொண்டாடி மறுநாள் மகர நட்சத்திரத்தில் சூரியனுக்குப் பொங்கலிட்டு தையுடன் பிறக்கும் புத்தாண்டை தொடருவதைப் போலவே, வட நாட்டில் தீபாவளி தினத்தன்று லக்ஷ்மி, குபேர பூஜை செய்து புது ஆண்டையும், புது கணக்கையும் துவக்குவது வழமையாக உள்ளது.

பொங்கல் நாளிற்குப் பிறகு, மாட்டுப் பொங்கலும், அதனைத் தொடர்ந்து காணும் பொங்கலன்று நாம் நமது குடும்பத்தின், உறவினர்களில் உள்ள பெரியோர்களிடம் ஆசி பெறுவதைப் போலவே தீபாவளி முடிந்த பிறகு பெரியோர்களிடம் ஆசி பெறும் பழக்கம் வட இந்தியாவில் உள்ளது.

பொதுவாக இந்நன்னாள் எல்லா கெட்ட எண்ணங்களும், பார்வைகளும் மறைந்து, அமைதியும், சுபிட்சமும் உருவாகிறது என்ற அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்