தீபாவளி என்றாலே இனிமைதான். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், குமரிகள், பெரியோர் எல்லோரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் உன்னத நாளை தீபாவளிப் பண்டிகை தருகிறது!
சிறுவர்களுக்கு இணையாக யாராலும் அந்நாளை அவ்வளவு இனிமையுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட முடியாது. தீபாவளி வருகிறது என்றாலே அவர்களுக்கு உற்சாகம்தான். அந்த ஒரு மாதம் முழுவதும் புத்தாடை எடுப்பதிலும், புதிய உணவு வகைகளை நினைவாலே சுவைப்பதிலும், தீபாவளி அதிகாலை வருவதற்கு முன்னரே பட்டாசு சத்தத்தை கற்பனையால் எண்ணி மகிழ்வதும், அதிகாலை புலரும் அந்நன்னாளில் யாரும் எழுப்பாமலேயே எழுந்து, குளித்து, புத்தாடையுடுத்தி, பட்டாசு கொளுத்தி அன்று முழுவதும் குதூகலத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
webdunia photo
WD
தீபாவளிப் பண்டிகை எல்லோருக்கும் இனிமையான பல நினைவுகளை எப்போதும் சுமந்து வருகிறது. சிறு வயதில் பட்டாசு வாங்கி வரும் தந்தைக்காக காத்திருப்பது, இளைஞராய் இருந்தபோது புத்தாடை உடுத்தி சக்தி வாய்ந்த பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தது என்று எண்ணற்ற வண்ண நினைவுகளை தீபாவளிப் பண்டிகை ஒவ்வொருவர் மனதிலும் நிழலாட வைக்கும்.
ஆயினும், நாம் சிறுவராய் இருந்து அனுபவித்தபோது இருந்த கலப்படமற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் வயதாக வயதாக சில சுமையான நினைவுகளையும் அவற்றோடு கலந்து சற்றே நமக்கு சோகத்தையும் ஊட்டுகிறது.
இரண்டாண்டுகளுக்கு முன் தீபாவளிக்காக பொருட்களை வாங்குவதற்காக தலைநகர் டெல்லியில் உள்ள சந்தைகளில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் பல பேர் உயிரிழந்தது அந்த ஆண்டின் தீபாவளியை சுமையான நினைவாக்கியது.
இப்படி பொது வாழ்விலோ அல்லது தனி வாழ்விலோ தீபாவளியையொட்டி நிகழ்ந்த துயரங்கள் அந்த மகிழ்ச்சியான வேளையை நோக்கிய சிந்தனையில் தொற்றிக் கொண்டு வருகின்றன.
ஆயினும் தீபாவளி அன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் அனைவரும் ஒன்று கூடி மகிழும் இன்பத்தையும் அளிக்கும் பண்டிகையாக, சமூக விழாவாக திகழ்கிறது.
நமது பண்பாட்டின் ஒரு அடையாளமாகவே ஆகிவிட்ட அந்த பண்டிகை,அதற்கு ஊற்றுக் கண்ணாய் இருந்த சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அன்பையும், சத்தியத்தையும், அகிம்சையையும் நமது அகத்திலும் புறத்திலும் நிலைநிறுத்துகிறது. அதனால்தான் தீபாவளி மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் ஒற்றுமை உணர்வையும் ஒன்றிக் கொண்டாடுவதில் ஈடற்ற திருப்தியையும் அளிக்கின்றது.
ஜாதியால், மதத்தால் பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகத்தில் தீபாவளி எனும் பண்டிகைக்கு வித்திட்ட ஒரு மாபெரும் போதகரின் ஆன்மீக வழிகாட்டல்கள் நிரந்தரமாக அமைதியையும், அன்பையும் நிலைநிறுத்தவல்லது என்பதனை நாம் புரிந்து கொண்டு அதனைக் கொண்டாட வேண்டும்.
webdunia photo
WD
வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் கொள்கை பேசிக் கொண்டு, எல்லாவித வேறுபாடுகளையும் சிந்தனையில் போட்டுக் கொண்டு, அன்றாட வாழ்க்கையில் பிளவுண்டு, மோதிக் கொண்டு துயரத்தில் மூழ்குவதை தவிர்த்துவிட்டு, அமைதியான உண்மையான இன்பமான வாழ்க்கைக்கு வித்திட்ட மகாவீரர் போன்ற ஆன்மீக வழிகாட்டிகளின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டு வாழ்வதே அமைதியான வாழ்விற்கு நம்மை நிரந்தரமாக அழைத்துச் செல்லும்.
அதற்கு வித்தாக தீபாவளியை நினைப்போம்! கொண்டாடுவோம்!