காசு கரியாகிறது என்று சொல்லக் கேட்டிருப்போம்... ஆனால் தீபாவளியன்று கண் முன்னே அதனை நாம் காண்போம்.
தீபாவளியன்று எவ்வளவு பேர் பட்டாசுகளை வாங்கி கொளுத்திப் போடுகிறோம். அவ்வளவும் ஒரு சில மணித் துளிகளில் வெடித்துச் சிதறி புகையைத்தான் தருகின்றன. இதனால் என்ன பிரயோஜனம்? இந்த கேள்வி எத்தனை பேர் மனதில் எழுகிறது.
ஆனால் இந்த பட்டாசினால் உயிர் வாழும் குடும்பங்கள்தான் எத்தனை எத்தனை? சிவகாசியில் எத்தனை பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் குடிசைத் தொழிலாக எத்தனை இடங்களில் பட்டாசுகள் செய்யப்படுகின்றன. இவர்களின் நலனுக்காக வேண்டியாவது தீபாவளி பட்டாசு தேவைதான் என்பது ஒரு சாரார் கருத்து.
ஒரு பக்கம் அவ்வளவு பட்டாசும் வெடித்து அதில் இருந்து வரும் புகையினால் சுற்றுச்சூழல் எந்த அளவிற்கு பாதிக்கும் என்கிறது மற்றொரு குரல்.
இவையெல்லாம் இருக்கட்டும் ஆதி காலத்தில் இருந்தே இந்த பட்டாசு வெடிக்கும் முறை இருந்துள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் ஏதேனும் உண்டா என்று ஆராய்ந்தால்....
புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்த்திருக்கும். ஆங்காங்கே மழை நீர் தேங்கி அதில் கொசுக்களும் பல்வேறு பூச்சி, கிருமிகள் உருவாகிக் கொண்டிருக்கும் சமயம்தான் இந்த ஐப்பசி மாதம். இந்த மாதத்தில் கொண்டாடப்படும் தீபாவளியன்று பட்டாசுகளை கொளுத்துவதால் ஏற்படும் புகையினால் கொசுக்கள் அழிகின்றன. மேலும் நெருப்புப் பொறிகளில் சிக்கி பல விஷ பூச்சிகளும் சாகின்றன. அதிகமான குளிரை விரட்டும் வகையிலும் இந்த பட்டாசுகள் கொளுத்தப்படுகின்றன.
எனவேதான், அன்றைய காலத்திலேயே ஐப்பசி மாதம் கொசுக்களை விரட்டவும், பூச்சிகளை ஒழிக்கவும் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் வகையில் தீபாவளியை பயன்படுத்தியுள்ளனர் நமது முன்னோர் என்று தெரிகிறது.
webdunia photo
WD
சரி... கடைசியாக பட்டாசு கொளுத்தலாமா? வேண்டாமா? என்ற குழப்பமே வந்து விட்டதா? எந்த குழப்பமும் வேண்டாம்... எச்சரிக்கையாக பட்டாசு வெடித்து இனிய தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.