இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் தீபாவளி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கின்றன.
திருமணம் முடிந்த முதல் ஆண்டில் வரும் தீபாவளியை `தலை தீபாவளியாக' புதுமணத் தம்பதியர் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த அளவுக்கு இந்துக்கள் மத்தியில் தீபாவளிப் பண்டிகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குழந்தைகளைப் பொறுத்தவரை பட்டாசுகள், புத்தாடை, இனிப்புகள் என்று அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள பிற மதத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கும் குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வர். அந்த வகையில் மதநல்லிணக்கத்திற்கும் தீபாவளிப் பண்டிகை காரணமாகிறது என்றால் அது மிகையில்லை.
தீபாவளி பிறந்த வரலாறு!
webdunia photo
WD
தீபாவளி - தீப+ஆவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து கொண்டாடுவதுதான் தீபாவளி.
தீபாவளி பிறந்தது இன்றில் இருந்து 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சமண சமய வரலாறு கூறுகிறது. சமண சமயத்தின் 24வது குருவான (திருத்தங்கரர்) ஸ்ரீமகாவீரா உடலை நீத்த நாள் முதல் தீபாவளி கொண்டாடப்பட்டு வருவதாக அந்த வரலாறு கூறுகிறது.
webdunia photo
WD
கி.மு. 599ல் பிறந்த மகாவீரர் தனது 14வது வயதில் வளமான வாழ்வைத் துறந்து ஆன்மீக ஞானம் தேடி இறையருள் பெற்றவராய் பல தேசங்களுக்குப் பயணம் செய்து அகிம்சை, சத்தியம், மனிதாபிமானம், அன்பு, பரிவு, கருணை ஆகியவற்றை 8 கொள்கைகளாக போதித்தார்.
இறை நிலையை எட்டி (முக்தி பெற்று) பல்வேறு அரசவைகளுக்குச் சென்று பேருண்மையை போதித்து வந்த மகாவீரர் கி.மு. 527ல் தன் உடலை துறந்தார்.
அவர் உடலைத் துறந்த நாளையே தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து அறியாமை இருள் அகன்று ஒளி பிறந்த நாளாக தீபாவளி என்று கொண்டாடப்பட்டதாகவும் அதுவே இன்று வரை பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் சமண வரலாறு கூறுகிறது.